விளையாட்டு
‘உதயநிதி காலிங்’… கேட்டதுமே மாறிப்போன பஞ்சாப் டி.எஸ்.பி முகம்: பாதுகாப்பாக சென்னை வந்த கபடி வீராங்கனைகள்
‘உதயநிதி காலிங்’… கேட்டதுமே மாறிப்போன பஞ்சாப் டி.எஸ்.பி முகம்: பாதுகாப்பாக சென்னை வந்த கபடி வீராங்கனைகள்
2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்காக தமிழகத்தில் சென்ற வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீராங்கனை ஒருவர் மீது பவுல் அட்டாக் செய்ததாக கூறப்பட்ட நிலையில், வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட, அதனால் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பஞ்சாப்பில் பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்த தமிழக அரசு, பயிற்சியாளர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், அனைவரும் பத்திரமாக தமிழக திரும்பவும், டெல்லியில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழக மாணவிகளை பத்திரமாக தமிழகம் அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் விளக்கம் அளித்தது. இந்த நிலையில், பஞ்சாபில் நடந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து வெளியேறிய தமிழ்நாடு வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை ரயில் மூலம் சென்னை திரும்பினர். தற்போது அவர்கள், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கபடி வீராங்கனைகளை விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் சந்தித்துப் பேசுகின்றனர். இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கபடி வீராங்கனைகள் தங்களை பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனர்.தொடர்ந்து பஞ்சாபில் நடந்த சம்பவம் தொடர்பாக அன்னை தெரசா பல்கலைக்கழக பெண்கள் கபடி அணி பயிற்சியாளர் கலையரசி பேசுகையில், “தென் மண்டல பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் 4 இடத்தைப் பிடித்த, தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் பெண்கள் கபடி அணியினர் பஞ்சாபில் விளையாட தேர்வு செய்யப்பட்டோம். இதில் பாரதியார் பல்கலைக்கழகம் பெண்கள் கபடி அணியினர் வரவில்லை. இந்திய முழுவதும் 16 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் ஒருதலை பட்சமாக செயலபட்டதால் பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் அணிகள் வெளியேறின. அன்னை தெரசா பல்கலைக்கழகம் லீக் போட்டிகளில் முன்னிலையில் இருந்தது. அதனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நாங்கள் காலிஇறுதி போட்டிக்கு முன்னேறினோம். இந்தப் போட்டி ஜனவரி 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடந்தது. போட்டி முடிய கடைசி 5 நிமிடம் இருக்கும் போது, எதிரணி நமது வீராங்கனையை தாக்க முயன்றனர். நமது வீராங்கனை தற்காப்புக்காக செயல்பட்டார். அப்போது அவர்கள் அணியினர் அனைவரும் நமது வீராங்கனை மீது தாக்குதல் நடத்தினர். அதனால் அந்த இடத்தில் ஒரு 5 நிமிடம் கைகலப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த செய்தியை எங்களது துணை வேந்தர், உண்ணவுத்துறை அமைச்சர் என அனைவரும் துணை முதல்வருக்கு கொண்டு சென்றனர். அங்கு நாங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தபோது, எங்களுக்கு அருகில் அங்குள்ள டி.எஸ்.பி இருந்தார். சார், ஒரு நிமிஷம் எங்கள் துணை முதல்வர் பேசுகிறார் எனச் சொன்னதுமே அங்கிருந்த சூழ்நிலை மாறியது. தமிழக வீராங்கனைக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பின்னர்தான் நிலைமை மாறியது. தமிழக அரசின் தலையீட்டால் நாங்கள் பாதுகாப்பாக டெல்லி அழைத்து செல்லப்பட்டோம். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
