இலங்கை
பட்ஜெட் மீதான இரண்டாவது வாசிப்பு நேற்று நிறைவேற்றம்!

பட்ஜெட் மீதான இரண்டாவது வாசிப்பு நேற்று நிறைவேற்றம்!
ஆதரவாக 155, எதிராக – 46 – தமிழரசு சபையில் இல்லை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது மதிப்பீடு (வாசிப்பு) மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது, ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பொதுஜன பெரமுன கட்சி, சர்வஜன அதிகாரம், ஐக்கிய தேசியக் கட்சி என்பன பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை. இதன்படி பட்ஜெட் மீதான இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை 19 நாள்கள் இடம்பெறவுள்ளது. 2025ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான வாக்கெடுப்பு மார்ச் மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.