இலங்கை
இராணுவத்தினரின் மீது ஜனாதிபதி அவதூறாம்!

இராணுவத்தினரின் மீது ஜனாதிபதி அவதூறாம்!
அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவிப்பு
போரின்போது இலங்கைப் படையினர் போர்க்குற்றம் இழைத்தனர் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உயிர்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுர செயற்பட்டு வருகின்றார் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் வீரவன்ஸ தெரிவித்ததாவது:
இலங்கையிலுள்ள இராணுவத்தை நாட்டுக்கு சார்பான தொழில்முறை இராணுவமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதாவது அரசுக்கு சார்பற்ற, தொழில்முறையற்ற இராணுவமே தற்போது உள்ளது என்ற கருத்தையே இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
போரின்போது தொழில்முறை இராணுவ அறத்துக்குப் பொருத்தமற்ற விதத்தில் இராணுவம் போர்க்குற்றம் இழைந்தது என மனித உரிமைகள் பேரவையாலும், டயஸ்போராக்களாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அந்தத் தவறான கருத்துக்களை உண்மையாக்குவதற்கே மேற்படி தரப்புகள் முயற்சித்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இராணுவம் அரசுக்கு சார்பற்றது, தொழில்முறையற்றது என்ற கருத்தை பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
தொழில்முறையற்ற இராணுவத்தால் போரை முடித்திருக்க முடியுமா? தொழில்முறையல்ல இராணுவம் எனக் கூறப்படுவதன் அர்த்தம், போர்க்குற்றங்களில் ஈடுபடக்கூடிய இராணுவம் என்பதாகும். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் இந்தக் கருத்து, பாதுகாப்பு படையினர் மீதான பெரும் தாக்குதலே – என்றார்.