நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இளையராஜா லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக கடந்த சில தினங்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். 

இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இளையராஜாவுக்கு தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய திரையுலகின் இசைத்துறையில் மூன்று தலைமுறையாக கோலோச்சி வருகிற இசைஞானி இளையராஜா, ஒரு இந்திய இசையமைப்பாளரால் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான ‘வேலியன்ட்’ இசையை லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

Advertisement

தமிழ்நாட்டின் கிராமப்புரங்களில் இருந்து தொடங்கிய தனது இசைப்பயணத்தை தற்போது உலக அரங்கில் எடுத்து சென்று தனக்கென தனி முத்திரை பதித்து, சாதனைகள் பல படைத்து இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும், இசைஞானி இளையராஜவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.