உலகம்
வட கடலில் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

வட கடலில் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
வடகிழக்கு இங்கிலாந்தில் அமெரிக்க இராணுவத்திற்காக ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் கப்பல் நேற்று கொள்கலன் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் பல வெடிப்புகள் ஏற்பட்டதுடன், இரு குழுவினரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தொன் ஜெட் எரிபொருளை சுமந்து செல்லக்கூடிய அந்த டேங்கர் கப்பல், சிறிய கொள்கலன் கப்பல் மோதிய போது நங்கூரமிட்டிருந்ததாகவும், அதன் சரக்கு தொட்டி உடைந்து கடலில் எரிபொருளை வெளியிட்டதாகவும் அதன் இயக்குநரான ஸ்டெனா பல்க் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் தீங்கிழைக்கும் செயல்கள் அல்லது பிற நபர்கள் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இரண்டு கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவின் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில், விபத்தினை அடுத்து 36 பணியாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை, போர்த்துகேசயக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான சோலாங்கின் குழு உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணி முடிவடைந்துள்ளதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த விபத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.