இந்தியா
புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல்: போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து போராடிய நாராயணசாமி உட்பட 100 பேர் கைது

புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல்: போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து போராடிய நாராயணசாமி உட்பட 100 பேர் கைது
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவர் அமுதரசனை, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனையில் அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனை கண்டித்து இன்று காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உட்பட 100-கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அரியாங்குப்பம் காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும், ஆட்சியாளர்களை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி கடலூர் சாலையில் அவர்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர். இன்ஸ்பெக்டரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன்