இலங்கை
ஒருங்கற்ற ரயில் சேவையால் பயணிகள் பெரும் அந்தரிப்பு!

ஒருங்கற்ற ரயில் சேவையால் பயணிகள் பெரும் அந்தரிப்பு!
வடக்கின் பிரதான ரயில் சேவைகளுள் ஒன்றான யாழ் ராணியின், ஒழுங்கற்றதும் பலவீனமானதுமான சேவைகள் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து காலை 6 மணிக்கு சேவைகளை ஆரம்பிக்கும் யாழ் ராணி, அனுராதபுரத்தை காலை 10:30 மணியளவில் சென்றடையும். அதன் பின்னர் மாலை 2:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து புறப்படும் சேவையானது மாலை 6:30 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும்.
அரச அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரின் நேர அட்டவணையுடன் தொடர்புடைய ரயில் சேவையாக இருப்பதால், அவர்களில் பலர் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக முன்னறிப்புகள் இல்லாமல் ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்படுவதால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன் ரயில் சேவைகளில் நேரதாமதங்களும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் காங்கேசன்துறை ரயில்நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:
வடக்கில் தற்போது ஒரேயொரு இயந்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்றது. ஆதலால்தான், சேவையில் தாமதங்கள் ஏற்படுகின்றன. விரைவில் இந்தப் பிரச்சினைகள் சீர்செய்யப்படும் – என்றார்.