இலங்கை
இராணுவத் தளபதிகளுக்கு பிரிட்டனின் தடைதொடர்பில் ஆராய்வதற்காகத் தனிக்குழு

இராணுவத் தளபதிகளுக்கு பிரிட்டனின் தடைதொடர்பில் ஆராய்வதற்காகத் தனிக்குழு
சிறிலங்கா படைகளின் முன்னாள் தளபதிகளுக்கு எதிராகப் பிரிட்டனால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைதொடர்பில் ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்ததாவது:
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர், போர்க்குற்றங்களைப் புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராணுவத் தளபதிகளான சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூரிய, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரிட்டனால் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடைகளுக்கு எதிராக ஓர் அரசாங்கமாக எமது நிலைப்பாட்டை நாங்கள் பதிவுசெய்துள்ளோம். அதற்கு மேலதிகமாக விசேட குழுவொன்றை அமைத்து இந்த விடயத்தைக் கையாள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையிலேயே இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது.
குறித்த குழுவின் பணிகளுக்கு தேவையெனக் கருதுகின்ற விடயம் தொடர்பான நிபுணத்துவத்து உதவிகளைப் பெறுவதற்காக, வேறு அதிகாரிகளின் அல்லது நிபுணர்களின் சேவைகளைப் பெறவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்’ – என்றார்.