பொழுதுபோக்கு
எம்புரானுக்கு வந்த அடுத்த சோதனை… பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

எம்புரானுக்கு வந்த அடுத்த சோதனை… பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை
மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகிய படம் ‘லூசிபர்’. தற்போது, இந்தப் படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எம்புரான் படம் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை எம்புரான் படம் படைத்திருக்கிறது. தற்போது ரூ.160 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, வலதுசாரி அமைப்புகள் கண்டனங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து, படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை நீக்கினர். அதன்படி, படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இதுதொடர்பாக நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இருப்பினும், ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ நாளேடான ‘ஆர்கனைஸர்’ அந்தப் படத்தின் இயக்குநர் பிருத்விராஜை விமர்சித்து எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனிடையே, எம்புரான் பட விவகாரத்தில் தனது மகன் குறிவைக்கப்படுகிறார், அவர் குறித்து சிலர் வேண்டும் என்றே வதந்தியை பரப்புகின்றனர். அவரை தனிமைப்படுத்த சிலர் முயற்சிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும், பிரித்விராஜை பலிகடாவாக்க முயற்சிப்புதாக நடிகர் பிரித்விராஜ் பரபரப்பு தாயார் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. பிருத்விராஜ் கடைசியாக கோல்ட், ஜன கண மன, மற்றும் கடுவா ஆகிய மூன்று படங்களை தயாரித்து நடித்திருந்தார். இதில், பிருத்விராஜ் ஒரு நடிகருக்கான சம்பளத்தை பெறவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு இணை தயாரிப்பாளராக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இணை தயாரிப்பாளராக பிருத்விராஜ் சுமார் ரூ. 40 கோடி பெற்றதாக தெரிகிறது. இதனையடுத்து, இந்த நிலையில், இந்த 3 படங்களின் வருமான கணக்குகளை கேட்டு வருமான வரித்துறை பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு வருகிற 29-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.