இந்தியா
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்; அரசைக் கண்டித்து போராட்டம்

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்; அரசைக் கண்டித்து போராட்டம்
புதுச்சேரியில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் திடீரென சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை எந்த விதமான முன் தயாரிப்புகளும் இன்றி செயல்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பாடங்களை கற்பதில் மாணவர்களுக்கு சிரமம் இருப்பதாக தெரிகிறது. இந்த பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.இந்த கல்வியாண்டின் ஆண்டு இறுதி தேர்விற்கு முன்பான மாதிரி தேர்வில் 9-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், மாணவர்களுக்கு இருக்கும் சிரமத்தை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யாமல், தேர்வு மையங்களில் அவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுக்கும் விதமாக முறைகேடான செயல்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதையொட்டி, புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி அரசைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும், பல மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.