நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 12/04/2025 | Edited on 12/04/2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து உணர்ச்சி பொங்க ரிவ்யூ கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை வெளியான அஜித் படங்களின் வரிசையில் இப்படம் தான் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. 

Advertisement

இந்த நிலையில் இப்படம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் சுமார் 30 நிமிடம் நிறுத்தப்பட்டுள்ளது. படம் திரையிடப்பட்டிருக்கும் போது மேல் பகுதியில் இருந்த மிரர் பால் லைட் கீழே விழுந்துள்ளது. அது ஒரு குழந்தையின் தலையில் விழுந்ததால் அக்குழந்தை வலியால் கத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அக்குழந்தையின் குடும்பத்தினர் திரையரங்க நிர்வாகிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிட்டதட்ட 30 நிமிடங்கள் இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. பின்பு மீண்டும் படம் திரையிடப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திரையரங்கில் பரபரப்பு நிலவியது.