வணிகம்
மறுபிறவி எடுக்கும் ஆர்.எக்ஸ்-100 பைக்? – யமஹாவின் பலே திட்டம்!

மறுபிறவி எடுக்கும் ஆர்.எக்ஸ்-100 பைக்? – யமஹாவின் பலே திட்டம்!
இந்திய பைக் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த யமஹா ஆர்.எக்ஸ் 100 மீண்டும் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தோற்றம், நவீன அம்சங்களுடன் வருகிறது. 2025 ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் இந்தியாவின் அக்கால இளைஞர்கள் முதல் இக்கால இளசுகள் வரை அனைவருக்கும் பிடித்த பைக்குகளில் ஒன்றாக உள்ளது. யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX 100) இந்திய பைக்கிங் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த ஒரு பழம்பெரும் இரு சக்கர வாகனமாகும். 1980 களில் அறிமுகப்படுத்தப்பட்ட RX 100 ஆனது, விரைவில் இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் பைக்குகளில் ஒன்றாக மாறியது. குறிப்பாக வேகம், செயல்திறன் மற்றும் ரைடிங் அனுபவத்தை விரும்புவோருக்கு என்று மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.1985 முதல் 1996 வரையில் 2 ஸ்ட்ரோக் எஞ்சினை கொண்ட RX100 மோட்டார் சைக்கிளை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. 1990 முதல் இந்தியாவிலேயே இந்த பைக்கை தயாரிக்க தொடங்கியது யமஹா. அதற்கு முன்னர் ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. அதன்பின்னர் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட R சீரிஸ் மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்தியது யமஹா.இருப்பினும் RX100 பைக் மீது மக்கள் கொண்டிருக்கும் மோகம் இதுவரையில் கொஞ்சம் கூட குறையவில்லை. அதற்கு காரணம் அதன் பிரத்யேக சத்தம். இந்திய சாலைகளில் இப்போதும் சீறிப்பாயும் RX100 பைக்கிற்கு தனி ரசிகர் கூட்டம் இருப்பதுண்டு. அதன் சத்தத்தை கேட்டதும் அந்த பைக்கின் பக்கம் பெரும்பாலான கண்கள் ஒரு நொடி திரும்பி பார்க்கும். சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரிடத்திலும் இதற்கு தனி மவுசு உண்டு.அவ்வப்போது இந்த பைக் எப்போது சந்தைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதன் பிரியர்கள் மத்தியில் எகிறுவது உண்டு. இப்போது அவர்களது நெஞ்சத்தை குளிர செய்யும் வகையில் அமைந்துள்ளது யமஹா நிறுவனத்தின் திட்டம். 1990களில் நிறுத்தப்பட்ட போதிலும், RX 100 ஒரு பிரியமான கிளாசிக் ஆகும். யமஹா ஆர்எக்ஸ் 100 மீண்டும் மறுபிரவேசத்திற்கு தயாராக உள்ளது.புதிய யமஹா ஆர்.எக்ஸ்-100 எஞ்சின்:யமஹாவின் பழைய RX100ன் 2-ஸ்ட்ரோக் எஞ்சின் இப்போது மாற்றப்பட்டுள்ளது மற்றும் புதிய மாடலுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ப 125cc 4-ஸ்ட்ரோக் (அ) அதற்கு மேற்பட்ட எஞ்சின் வழங்கப்படும். இந்த எஞ்சின் வலுவான செயல்திறனை கொடுப்பது மட்டுமின்றி, சிறந்த மைலேஜையும் கொடுக்கும். இந்த புதிய RX100 11 முதல் 14 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100-110 கிமீ ஆகும்.புதிய யமஹா ஆர்.எக்ஸ்-100 சிறப்பம்சங்கள்:புதிய யமஹா ஆர்.எக்ஸ்-100 பைக் டிஸ்க் பிரேக், ஏபிஎஸ் சிஸ்டம், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் உள்ளிட்ட பல நவீன அம்சங்களுடன் வெளியாகும். மேலும், இந்த பைக் பி.எஸ்-6-ல் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய யமஹா ஆர்.எக்ஸ்-100 விலை மற்றும் வெளியீடு:யமஹா ஆர்.எக்ஸ்-100 2025 முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் மதிப்பிடப்பட்ட விலை சுமார் ரூ .1 லட்சம் முதல் ரூ .1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம். இந்த பைக் சந்தையில் ஹோண்டா சிபி ஷைன் மற்றும் டி.வி.எஸ். ரைடர் போன்ற பைக்குகளுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும். இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டால், இந்திய சந்தையில் ஒரு முத்திரையை உருவாக்கும் என்று சொல்லலாம்..!