பொழுதுபோக்கு
நீதானே என் பொன்வசந்தம்… தன்னம்பிக்கை நாயகி சமந்தாவின் பிறந்தநாள் இன்று!

நீதானே என் பொன்வசந்தம்… தன்னம்பிக்கை நாயகி சமந்தாவின் பிறந்தநாள் இன்று!
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நாயகி சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள். இவர் கடந்த 1987-ஆம் ஆண்டு சென்னை பல்லாவரத்தில் பிறந்தார். கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்த சமந்தா, அதன் பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘யே மாயா சேசாவே’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை சமந்தா தொடங்கினார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை அவர் வென்றார்.அதன் பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கில் சமந்தா நடித்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.கமர்ஷியம் படங்கள் மட்டுமின்றி அழுத்தமான கதைக்களங்களிலும் சமந்தா நடித்துள்ளார். குறிப்பாக, நடிகையர் திலகம், சூப்பர் டீலக்ஸ், மஜிலி உள்ளிட்ட படங்களில் சமந்தாவின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்தன. பல்வேறு விருதுகள் வாங்கிய நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதன்மையானவராக திகழ்கிறார். குறிப்பாக, 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 நந்தி விருதுகள் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விருது போன்றவற்றை இதுவரை சமந்தா பெற்றுள்ளார்.இதனிடையே, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயினால் சமந்தா பாதிக்கப்பட்டார். அதாவது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலமானது, தவறுதலாக அதன் ஆரோக்கிய செல்களை தாக்கி பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதை மயோசிடிஸ் என்று அழைப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.கடந்த 2017-ஆம் ஆண்டில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிரிந்தனர். நோயின் பாதிப்பு ஒரு புறம், திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரிவு மறுபுறம் என்று உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சமந்தா பல பிரச்சனைகளை சந்தித்தார்.எனினும், இது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தனது தன்னம்பிக்கை மூலம் எதிர்கொண்ட சமந்தா, தனது ரசிகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கூட ஆரோக்கியமற்ற துரித உணவுகளின் விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று சமந்தா அறிவித்தார். அந்த வகையில் தன்னம்பிக்கை நாயகியாக ஜொலிக்கும் சமந்தா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.