இந்தியா
பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகளை ‘போராளி’ என்று குறிப்பிட்டதாக சர்ச்சை: பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு

பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகளை ‘போராளி’ என்று குறிப்பிட்டதாக சர்ச்சை: பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ‘போராளி’ என்று பிபிசி இந்தியா செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசு தரப்பில் இருந்து பிபிசி இந்தியாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: After Pahalgam terror attack, India blocks 16 Pakistani YouTube channels, writes to BBC over Kashmir reporting பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. இவற்றில் டான் நியூஸ், சமா டிவி, ஜியோ நியூஸ் உள்ளிட்ட சில முன்னணி செய்தி தொலைக்காட்சிகளும் அடங்கும். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.குறிப்பிட்ட சேனல்களை தடை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்ததாக கூறப்படும் நிலையில், இந்த சேனல்களை பின்தொடர்பவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 63.08 மில்லியன் ஆகும்.டான் நியூஸ் டிவி, பாகிஸ்தானின் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றாகும். இதனை 1.96 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். சமா டிவி சேனலை 12.7 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதே போன்று ஒவ்வொரு சேனலையும் ஏராளமானோர் பின்தொடர்வதாக கூறப்படுகிறது.ஒரு நபர் இந்த சேனல்களை அணுக முயன்றால், தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட தளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வரும். இதனிடையே, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிபிசி வெளியிட்ட செய்தியை மேற்கோள் காண்பித்து, அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த வகையில், பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை ‘போராளிகள்’ என்று குறிப்பிட்டு பிபிசி செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பாக பிபிசி இந்தியா தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, இத்தகைய செய்திக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததாகவும், இனி வரும் காலங்களில் வெளியிடப்படும் செய்தியை கண்காணிக்க இருப்பதாகவும் வட்டாரம் கூறுகிறது.இதேபோன்று, அமெரிக்க செய்தி நிறுவனமான ஏபி (அசோசியேட்டட் பிரஸ்) மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் செய்தி வெளியிடுகளாலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, நிலைமையை கருத்திற்கொண்டு தவறான தகவல்கள் பரவாமல் இருக்கும் வகையில் இது போன்ற செய்திகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கப் போவதாக தெரிகிறது.இது தவிர கடந்த நான்கு நாட்களில், இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக பல்வேறு பாகிஸ்தான் வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர் குழுக்களிடமிருந்து உருவாகும் எந்தவொரு சைபர் தாக்குதலையும் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.பஹல்காம் தாக்குதல் நடந்த சில நாட்களில், பாகிஸ்தானியர்களுக்கான விசா தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது.