விளையாட்டு
ஐ.பி.எல் 2025 பிளே-ஆஃப் ரேஸ்: 4-வது இடத்துக்கு 2 அணிகள் போட்டி… டெல்லிக்கு 58.2% வாய்ப்பு!

ஐ.பி.எல் 2025 பிளே-ஆஃப் ரேஸ்: 4-வது இடத்துக்கு 2 அணிகள் போட்டி… டெல்லிக்கு 58.2% வாய்ப்பு!
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் நேற்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின..மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல் 2025: பிளே-ஆஃப் ரேஸ் இந்த வெற்றியின் மூலம் ஆறுதல் அடைந்துள்ளது சென்னை. அதேநேரத்தில், நடப்பு சாம்பியனான கொல்கத்தாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பிளே-ஆஃப் ரேஸில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறி விட்டார்கள். நடப்பு தொடருக்கான லீக் சுற்றில் இன்னும் 13 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், சென்னை, ராஜஸ்தான், மற்றும் ஐதராபாத் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன. குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைவது உறுதியாகி விட்டது. ஆனால், மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இன்னும் சம வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகள் உள்ளன.இதுதொடர்பாக வெளியாகியுள்ள கணிப்புகள் படி, இன்னும் 13 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், 8,192 சாத்தியமான காம்பினேஷன் கொண்ட முடிவுகள் கிடைத்துள்ளன. இவற்றில் எத்தனை அணிகள் முதல் நான்கு இடங்களுக்குள் தனித்தனியாகவோ அல்லது சமநிலையிலோ வருகின்றன என்பது பார்க்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு அணியையும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ எத்தனை காம்பினேஷன்கள் முதல் இரண்டு இடங்களுக்குள் கொண்டு வருகின்றன என்பதையும் பார்த்துள்ளனர். இந்த காம்பினேஷன் படி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத், போட்டி முடிவுகளின் சாத்தியமான 8,136 காம்பினேஷன்களில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது. அதாவது, அந்த அணியின் பிளேஆஃப் வாய்ப்பு 99.3% ஆக உள்ளது. அவற்றில் 6,120 காம்பினேஷன்களில் அந்த அணி தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். அதாவது, குஜராத் அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க 74.7% வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆர்.சி.பி அணி பிளே-ஆஃப்க்கு செல்ல அதிகபட்சம் 99.7% வாய்ப்புள்ளது. முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க 76.1% வாய்ப்பு இருக்கிறது. பஞ்சாப் அணி பிளே ஆஃப் செல்ல 90.2% வாய்ப்பு இருக்கிறது. முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க அந்த அணிக்கு 44.5% வாய்ப்புள்ளது. மும்பை அணி பிளே-ஆஃப்க்குள் நுழைய 62.0% வாய்ப்புள்ளது. முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வெறும் 15.9% தான் வாய்ப்பு உள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை பிளே-ஆஃப்க்குள் கால் வைக்க 58.2% வாய்ப்புள்ளது. முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க 14.8% வாய்ப்புள்ளது. பிளே-ஆஃப்க்குள் நுழைய லக்னோவுக்கு 8.6% மற்றும் கொல்கத்தாவுக்கு 2.1% வாய்ப்பு தான் இருக்கிறது.