நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெளிநாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. பின்பு நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் இப்படத்தின் சிறப்பு காட்சி நேரடி ஆர்கெஸ்டராவுடன் திரையிடப்பட்டது. இந்த திரையிடல் இப்படம் பெற்ற மகத்தான வெற்றியை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. லண்டனில், ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த திரையிடல் ராயல் பில்ஹார்மோனிக் கச்சேரி இசைக்குழு நேரடி இசையை வாசித்தது. இதனை படத்தின் இசையமைப்பாளர் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி தலைமை தாங்கினார். 

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரை சர்பிரைஸ் செய்தார். அதாவது ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் வருகிற 20ஆம் தேதி வரும் நிலையில் அதற்கு முன் கூட்டியே நிகழ்ச்சியில் அவரை கட்டி பிடித்து கண்ணத்தில் முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உடனே அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி அன்பை வெளிப்படுத்தினர்.