இந்தியா
அமெரிக்காவுக்கு பயந்து இந்தியா போரை நிறுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை; வைத்திலிங்கம் எம்.பி

அமெரிக்காவுக்கு பயந்து இந்தியா போரை நிறுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை; வைத்திலிங்கம் எம்.பி
’ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் தேசியக் கொடி யாத்திரை காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (மே 14) மாலை நடைபெற்றது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலையருகே தொடங்கிய பேரணிக்கு கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. பேரணியானது நேரு வீதி வழியாக மிஷன் வீதி வரை நடைபெற்றது.பின்னர் வைத்திலிங்கம் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன். இதில் பிரதமர் மோடியின் நடவடிக்கை சரியில்லை என்பது தான் உண்மை. இந்திய ராணுவம் தன்னுடைய திறமையை முழுமையாக காட்டியிருக்கக்கூடிய நேரத்தில் போரை பாதியில் நிறுத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்பது தான் இந்திய மக்களின் நிலைப்பாடு. ஆனால் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதான் மிக வருத்தமானது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு மனுவை தர இருக்கின்றோம். அமெரிக்காவுக்கு பயந்து இந்தியா போரை நிறுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை. அமெரிக்க அதிபர் டிரம்ப் நாங்கள் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியிருக்கின்றோம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றார். இது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92, 93 சதவீதம் என இருந்த தேர்ச்சி விகிதம் இப்போது 88 சதவீதம் என்று, சொல்லக்கூடிய அளவில் தான் இருக்கிறது. இதனால் ஏழையாக இருக்கும் மாணவர்கள் பாதிக்கின்றார்கள். அவர்கள் மறுபடியும் எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல முடியாத அளவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு பயிற்சி அளித்து உனடியாக தேர்வு எழுதச் செய்ய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு இதுபோன்ற மோசமான நிலை வரக்கூடாது. அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லாத குறை, அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவற்றை நாங்கள் பலமுறை எடுத்துக்கூறினோம். ஆனால் இந்த அரசு அதனை காதில் கேட்காமல் இருக்கின்றனர். இது வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு சான்றிதழ் பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே வருவாய் துறையினரின் பழைய சான்றிதழ்கள் எது இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த கல்லூரிகளில் அனுமதி கிடைக்கின்றதோ அந்த கல்லூரி நேரத்தில் சான்றிதழ் தரலாம் என்ற வழிமுறையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி கூறினார்.