இலங்கை
கிளிநொச்சியில் குடிநீர் நெருக்கடி; தவிக்கும் மக்கள்

கிளிநொச்சியில் குடிநீர் நெருக்கடி; தவிக்கும் மக்கள்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளாலி கிராம அலுவலர் பிரிவில் பொது மக்கள் நீண்ட காலமாக கடும் குடிநீர் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
கிளாலி பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிணறுகளின் நீர் உவர் நீராகவும், கடும் காவி நிறத்திலும் காணப்படுகிறது.
இதனால் பொது மக்களால் குறித்த நீரை பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.
இருப்பினும் வேறு வழியின்றி குடிப்பதனை தவிர இதர தேவைகளுக்கு அந்த நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
கடும் காவி நிறத்தில் உள்ள நீரில் ஆடைகளை கழுவுதன் மூலம் அவை நிறம் மாறி அழுக்கு ஆடைகள் போன்று காணப்படுகிறது எனவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரதேச சபையினால் ஆங்காங்கே நீர்த்தாங்கி வைத்து வழங்கப்படுகின்ற நீரும் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலம் வழங்கப்படுகின்ற நீரை விரைவுப்படுத்தி வழங்குவதோடு, ஏனைய கிராமங்களில் வழங்கப்பட்டது போன்று தங்களுக்கும் இலவசமாக நீர் இணைப்பினை வழங்குவதற்கு நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.