இலங்கை
நான்கு சபைகளில் தவிசாளர் பதவிகளுக்கு போட்டி – தமிழ்த் தேசியப் பேரவை

நான்கு சபைகளில் தவிசாளர் பதவிகளுக்கு போட்டி – தமிழ்த் தேசியப் பேரவை
பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை, ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாரளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என்று தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தையிட்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
ஏனைய சபைகளில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற, தமிழ்த் தேசிய நிலைப்பாடுடன் உள்ள கட்சிக்கு ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் வழங்குவோம்.
தமிழ்த் தேசியத்துக்காக ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியம் சார்ந்த ஒரு இணக்கப்பாடு இல்லாமல் வெறுமனே கதிரைக்காகச் சபைகளைக் கைப்பற்றும் நோக்கில் செயற்படுவது பொருத்தமில்லை என்று கருதுகின்றோம்.
உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக எம்முடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது தமிழரசுக் கட்சி ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டுள்ளது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கோரியிருந்தபோதும், பங்காளிக் கட்சிகளுடன் பெசி முடிவை அறிப்போம் என்று கூறியிருந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை-என்றார்.