நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 15/05/2025 | Edited on 15/05/2025

சமூக வலைதளம் மற்றும் சின்னதிரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஜி.பி. முத்து. இவர் தூத்துக்குடியில் திருச்செந்தூரில் உள்ள உடன்குடி கிராமத்தில் வசித்து வருகிறார். அந்த, பகுதியில் பழமை வாய்ந்த கோயில் ஒன்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக சாலையை ஆக்கிரமித்து கோயில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் கீழத் தெருவை காணவில்லை என்றும் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஜி.பி. முத்து தனது மனைவியுடன் வந்து புகார் அளித்தார். மேலும் அந்த தெரு பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார், வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என புகார் கொடுக்கும் பாணியில் இருப்பதாக பலராலும் பார்க்கப்பட்டது.  

இதனை தொடர்ந்து அந்த ஊர் மக்கள், ஜி.பி. முத்து பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி ஊர் கோயில் கட்ட இடையூறு செய்வதாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜி.பி. முத்துவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஜி.பி. முத்து வெளியே வந்ததால் அவருக்கும் ஊர் மக்களுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் முற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Advertisement

பின்பு ஜி.பி. முத்துவை காவல் துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஊர் மக்கள், ஜி.பி. முத்து பிரபலமாக இருப்பதால் கோயிலுக்கு சொந்தமான இடத்தை கேட்டதாகவும் அதை அவருக்கு வழங்காததால் தங்களை மிரட்டி வருவதாகவும் சொல்லியுள்ளதாக கூறப்பட்டது. மேலும் கோயில் பணிகளை தொடர்ந்து செய்வதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஜி.பி. முத்து வீட்டை மீண்டும் முற்றுகையிட போவதாக தெரிவித்ததால் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வருமான வரித்துறையினரை வைத்து பிரச்சனையை பேசி சரிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனடிப்படையில் ஜி.பி. முத்துவும் ஊர்மக்களும் இட பிரச்சனை சம்பந்தமாக வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்த முடிவெடுத்தனர். அதன் படி சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் பங்கேற்ற நிலையில் ஜி.பி. முத்து தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று இன்னொரு தரப்பிடம் கோயில் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும், தெருவில் வரக்கூடாது என வட்டாட்சியர் கூறினார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த தரப்பினர் கோயில் இருந்த இடத்திலே புதுப்பிக்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் சமாதான பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்தது.

பின்பு இரு தரப்பினரிடமும் மீண்டும் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை தங்களிடம் வந்து சொல்லுமாறும் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்து தருமாறும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இரு தரப்பினரும் எங்களுக்குள் பிரச்சனை இல்லை, அது சரியாகிவிட்டது, இனி நாங்கள் சமாதானமாக இருப்போம் என கூறினர். 

Advertisement