
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 22/05/2025 | Edited on 22/05/2025

‘டிமாண்டி காலனி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இதற்கு முன்னாடி ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்தார். இந்த நிலையில் டிமாண்டி காலனி படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிறது. இதன் மூலம் 10 ஆண்டுகளை இயக்குநராக அஜய் ஞானமுத்து கடந்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், என் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது. பத்து வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் கத்துக் குட்டியாக எனது பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது எனது முதல் படம் ‘டிமாண்டி காலனி’ பத்து வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது. நாம் விரும்பியதை செய்யும் போது அதற்கான ஆதரவும் அன்பும் தொடர்ந்து கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
என்னுடைய முதல் படமான ‘டிமான்டி காலனி’ நான் இயக்குநராகப் பணிபுரிவதற்கு முந்தைய கட்டத்தின் பிரதிபலிப்பாகும். ஏனெனில் ‘ஹாரர்’ படங்கள் திரையரங்குகளில் ஒரு பார்வையாளராக எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. ‘தி எக்ஸார்சிஸ்ட்’, ‘தி ஓமன்’ மற்றும் ‘தி கன்ஜூரிங்’ போன்ற கிளாசிக் ஹாரர் படங்கள் எல்லா சினிமா பிரியர்களுக்கும் என்றென்றும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். இதுபோன்ற படங்களின் தாக்கமே தடைகளைக் கடந்து புதிய உலகத்தை உருவாக்க என்னைத் தூண்டியது. அதில்தான் ‘டிமாண்டி காலனி’ என்ற புதிய ஹாரர் வகை ஜானர் படத்தை உருவாக்கினேன். மோகனா மூவிஸ் எம்.கே. தமிழரசு சார், அருள்நிதி சார் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி சார் ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால், ‘டிமான்டி காலனி’ உருவாகி இருக்காது. அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அருள்நிதி சார் ‘டிமான்டி காலனி’ உலகத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் தொழில்துறை நண்பர்கள், பத்திரிகை- ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் எனக்குக் கொடுத்து வரும் அன்பு ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்புப் படைப்பை வழங்குவதற்கான பொறுப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த டிமாண்டி காலனி வரிசையில் இரண்டு படங்களுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்பை அடுத்து இதன் மூன்றாவது பாகத்தை எடுத்து வருகிறோம். இது நிச்சயமாக பார்வையாளர்களுக்கு சில்லிடும் ஹாரர் அனுபவத்தைக் கொடுக்கும். விரைவில் உங்கள் அனைவரையும் அப்டேட்டுடன் சந்திக்கிறேன்” என்றார்.