இலங்கை
தனியாருக்கு வழங்குவதற்காக உப்புப் பதுக்கப்பட்டமையே பற்றாக்குறைக்குக் காரணம்!

தனியாருக்கு வழங்குவதற்காக உப்புப் பதுக்கப்பட்டமையே பற்றாக்குறைக்குக் காரணம்!
ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு, தனியார் வியாபாரத்துக்காக உப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம். அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் பகுதிகளில் இவ்வாறு உப்பு பதுக்கப்பட்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது:
தேசிய மக்கள் சக்தி ஆட்சியேற்று 7 மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் இன்னும் நாட்டில் சில உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குத் துரித தீர்வுகளை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை. அரிசித் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து தற்போது உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக அரச உப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. உப்பை இறக்குமதி செய்வதற்கு எந்தத் தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறாயின், அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு எங்கே? அந்த உப்பு ஏன் சந்தைக்கு வரவில்லை? அவற்றுக்கு என்ன நடந்தது?
புத்தளம் உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருக்கும் நபரே, உப்பை விற்பனை செய்யும் தனியார் நிறுவனமொன்றின் தலைவராக இருக்கிறார். அவரே இறக்குமதி செய்யப்படும் உப்பை தனது நிறுவனத்துக்குக் கொண்டு செல்கின்றார். எனவே, உப்பைத்தேடி புறக்கோட்டைகளில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தாமல், அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் பகுதிகளில் சோதனை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்தியாவில் ஒரு மெற்றிக் தொன் உப்பின் விலை 80 டொலராகும். அதனை கொண்டுவரும் போது ஒவ்வொரு கிலோவுக்கும் அரசாங்கம் 40 ரூபாவை வரியாக அறவிடுகின்றது. அனைத்துச் செலவுகளையும் சேர்த்தால் ஒருகிலோ உப்பை 100 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால், செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி, இன்று ஒரு கிலோ உப்பை 350 ரூபா முதல் 400 ரூபா வரை விற்பனை செய்கின்றனர் – என்றார்.