நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 05/06/2025 | Edited on 06/06/2025

விலங்கு வெப் சீரிஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் விமல் இரண்டாவது ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். விலங்குக்குப் பிறகு இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல கவனம் பெற்று வரும் நிலையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் ரசிகர்களிடம் எந்த அளவு வரவேற்பை பெற்றுள்ளது..?

ஒரு மலை கிராமத்தில் சுப்ரமணியபுரம் மற்றும் யோக்கோபுரம் என இரண்டு ஊர்கள் இருக்கிறது. சுப்ரமணியபுரம், இந்துக்கள் வழிபடும் இடமாகவும் யோக்கோபுரம் கிறிஸ்தவர்கள் வழிபடும் இடமாகவும் இருக்கிறது. இந்த ஊர்களுக்கு இடையே அடிக்கடி மத சம்பந்தப்பட்ட மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே இந்த இரு ஊரை சேர்ந்த கலையரசன், கூல் சுரேஷ் மற்றும் இரு நபர்கள் திருமணம் செய்ய ஆயத்தம் ஆகிறார்கள். அந்த சமயம் அவர்கள் அனைவரும் நாயகன் விமல் மற்றும் நாயகி சாயாதேவி யால் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த மரணங்களை பற்றி இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் தலைமையில் போலீஸ் படை துப்பறிய ஆரம்பிக்கிறது.

Advertisement

இதைத் தொடர்ந்து கொலை செய்தது விமலும் சாயா தேவியும்தான் என போலீசார் கண்டுபிடிக்கின்றனர். பிறகு அவர்களைப் பிடிக்க செல்லும் இடத்தில் விமல் சாயாதேவி யார் என அதிர்ச்சிகரமான உண்மை போலீஸுக்கு தெரிய வருகிறது. இதனால் மிகவும் அதிர்ச்சிகரமான போலீசார் அந்த கொலைகளை தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? உண்மையில் விமல், சாயாதேவி யார்? என்பதே இந்த படத்தின் மீதி கதை. 

மதப் பிரிவினை வாதத்தை வைத்துக்கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் நேர்த்தியான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பான படமாக இந்த பரமசிவன் பாத்திமா படத்தை கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். மிகவும் கான்ட்ரவர்சியான ஒரு கதையை வைத்துக் கொண்டு கொஞ்சம் அங்கே இங்கே என சற்றே மிஸ் ஆனாலும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் படி இருக்கும் கதைக்களத்தை வைத்துக்கொண்டு நேர்த்தியாக திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களுக்கும் ஜனரஞ்சகமான முறையில் ஒரு குடும்பத்துடன் கண்டுகளிக்கும் படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக படத்தின் டப்பிங் மூலம் காட்சிகளை நன்றாக மெருகேற்றி காட்சிக்கு காட்சி எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாத படி அயற்சி இல்லாமல் கொடுத்திருக்கிறார்.

அதோடு இரண்டாம் பாதியைக் காட்டிலும் முதல் பாதி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்வது படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டு கதை வேறு ஒரு கோணத்தில் பயணித்து மிகவும் அழுத்தமான காட்சிகளால் நகர்ந்து செண்டிமெண்டாக முடிகிறது. இந்த கால சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் இன்னும் கூட திரைக்கதை வேகத்தை கூட்டி இருக்கலாம். 

Advertisement

நாயகன் விமல் இரண்டாவது ரவுண்டில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார். நாயக பின்பத்தை தாண்டி கதை கருவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் பார்ப்பவர்கள் இடையே நன்றாக போய் சேருகிறது. குறிப்பாக எதார்த்தமான இவரது நடிப்பு கதை ஓட்டத்திற்கு நன்றாக ஒத்துப் போகிறது. நாயகி சாயாதேவி நம் பக்கத்து வீட்டு முகம். இவருக்கும் விமலுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபாதர் வேடத்தில் வரும் எம்.எஸ். பாஸ்கர் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் இசக்கி கார்வண்ணன் மிடுக்கான தோற்றத்தின் மூலம் அதிரடி காட்டி நடிப்பில் புதுமுகம் என்ற உணர்வை தர மறுத்திருக்கிறார். அந்த அளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். ஹீரோயின் தோழி ஷேஷ்விதா நல்ல தேர்வு. தனக்கு கொடுத்த வேலையை கண்ணாலேயே செய்து முடிக்கிறார்.

கான்ஸ்டபிளாக வரும் காதல் சுகுமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பிராமிசிங்கான ரோலில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவரது கதாபாத்திரம் கதை ஓட்டத்திற்கு நன்றாக வலு சேர்த்து இருக்கிறது. அவர் இந்த முறை காமெடி கதாபாத்திரத்தை தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம் செய்து கவர்ந்திருக்கிறார். முதல் காட்சியில் வந்து இறந்து போகும் கலையரசன் தனக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் கூல் சுரேஷ் தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். வில்லனாக வரும் சுகுமார் வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்று இருக்கிறார். சாமியாராக வரும் அருள்தாஸ் தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். 

மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடக்கும் கதைக்களம் என்றாலே சுகுமார் ஒளிப்பதிவில் மிகவும் பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அதற்கு விதிவிலக்காக இல்லாமல் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு வேகம் கூட்டி இருக்கிறது. தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக ஒலித்து இருக்கிறது. 

Advertisement

மதரீதியான பாகுபாடுகள் இன்னமும் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த மாதிரியான வன்கொடுமைகளை தனது காட்சி அமைப்புகள் மூலம் நேர்த்தியாக காட்சிப்படுத்தி விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைத்து முதல் பாதி படத்தை நன்றாக ரசிக்க வைத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இரண்டாம் பாதி திரைக்கதைக்கு வேகம் கூட்ட இன்னும் கூட கவனம் செலுத்தி இருக்கலாம். இருந்தும் அது படத்திற்கு பெரிய பாதகமாக இல்லாமல் தான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி பார்ப்பவர்களுக்கு நிறைவான படமாக இந்த பரமசிவன் பாத்திமா படத்தை கொடுத்திருக்கிறார்.

பரமசிவன் பாத்திமா – ஒன்றே குலம்!