இலங்கை
இரண்டரை மாதங்களுக்கான எரிபொருள் இருப்பிலுள்ளது! அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

இரண்டரை மாதங்களுக்கான எரிபொருள் இருப்பிலுள்ளது! அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
இரண்டரை மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் இருப்பிலுள்ளது. எனவே, பொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய ஒரு லட்சத்து 60 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மேலும் 90 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையவுள்ளது.
நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 4 மசகு எண்ணெய்க் கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 2 இலட்சத்து 46 ஆயிரத்து 200 மெற்றிக்தொன் 92 ஒக்ரேன் ரக பெற்றோல், 5 ஆயிரம் மெற்றிக்தொன் 95 ஒக்ரேன் ரக பெற்றோல், ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 250 மெற்றிக்தொன் ஓட்டோ டீசல். 10 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் சுப்பர் டீசல் என்பனவும் ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என்பதோடு. இந்த முற்பதிவுகளும் இனிவரும் நாள்களில் கிடைக்கப்பெறவுள்ளன. எனவே மக்கள் எரிபொருள்களுக்காக வரிசைகளை ஏற்படுத்தி செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்- என்றார்.