இலங்கை
செம்மணிப் புதைகுழி; அவதானிக்கப்பட்ட சிதிலங்களை மீட்கும் பணிகள் துரிதகதியில்!

செம்மணிப் புதைகுழி; அவதானிக்கப்பட்ட சிதிலங்களை மீட்கும் பணிகள் துரிதகதியில்!
நேற்றுப் பாதணியொன்று அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது, பாதணியொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன். இதுவரை அவதானிக்கப்பட்டு முற்றாக மீட்கப்படாமல் இருந்த மனிதச் சிதிலங்களை மீட்கும் பணிகள் நேற்றுத் துரிதப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் அடையாளம் காணப்பட்டசெம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 33 மனிதச் சிதிலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை முற்றாக அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன. நேற்றுமுன்தினம் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிற புத்தகப்பையொன்றும், என்புத் தொகுதியொன்றும் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதற்குக் கீழே பாதணியொன்று நேற்று அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த என்புத் தொகுதியைச் சூழ ஆடைகள், கண்ணாடி வளையல்கள் என்பனவும் முன்னதாக அடையாளம் காணப்பட்டிருந்தன.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா. ரணித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.