இலங்கை
வெளிநாடுகளில் இருந்து வந்த விரைவு தபால்களால் அதிர்ச்சியில் சுங்கத் திணைக்களம்

வெளிநாடுகளில் இருந்து வந்த விரைவு தபால்களால் அதிர்ச்சியில் சுங்கத் திணைக்களம்
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.
இந்த போதைப்பொருட்கள் சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்த 2024 ஜனவரி 1 முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக அமெரிக்கா, கனடா மற்றும் மலேசியாவிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகளை சோதனை நடவடிக்கைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர்.
நீண்ட காலமாக பொதிகளை உரிமை கோராததால், அவைகளை விரிவான சோதனைகளுக்கு உட்படுத்த சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 25 ஆம் திகதி சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொதிகளை திறந்து ஆய்வு செய்தனர், மேலும் பொதிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதைப்பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.
அந்தப் பொதிகளில் 1 கிலோ 101 கிராம் கொக்கேய்ன், 1 கிலோ 666 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் நான்கு குப்பிகளில் கஞ்சா எண்ணெய் இருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 60 மில்லியன் ரூபாவாகும், மேலும் போதைப்பொருள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.