இலங்கை
உள்ளகப் பொறிமுறையூடாக பொறுப்புக்கூறல் நடவடிக்கை; வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

உள்ளகப் பொறிமுறையூடாக பொறுப்புக்கூறல் நடவடிக்கை; வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!
உள்ளகப் பொறிமுறை வலுப்படுத்தப்பட்டே பொறுப்புக் கூறல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கான தனது பயணத்தின்போது இங்குள்ள நிலைமைகளை நேரில் அவதானித்தார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரித்தார்.
இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வருகை நாட்டுக்கு மிக முக்கியத்துவம் மிக்கதாக அமைந்தது. ஏனெனில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இயங்குகின்றது. எனினும், வடக்கு கிழக்கு போர் விவகாரம் தொடர்பிலேயே மனித உரிமைகள் பேரவை செயற்படுகின்றது என்ற பிம்பம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை, வாழும் உரிமை, குடிநீர் உரிமை, மாற்றுதிறனாளிகளுக்கான உரிமை, சமூக நீதி உட்பட மனித உரிமைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதே மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்பாகும்.
2022ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. சர்வதேச தலையீடும் கோரப்பட்டது.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர், கால அவகாசம் கோரினோம். தேசியப் பொறிமுறை ஊடாக பொறுப்புக்கூறல் நடவடிக்கை வலுப்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தோம். அந்த கோரிக்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செவிமடுத்தது. அதேபோல் எம்மால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தோம். அதற்கமையவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்தார்.
தேசியப் பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை அவரால் நேரில் அவதானிக்க முடிந்தது. ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு எந்தவொரு தேர்தல் வன்முறைச் சம்பவமும் இடம்பெறவில்லை. நாம் வெற்றிக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை. பொதுத்தேர்தல் அமைதியாக நடந்தது. ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவினர் நாட்டுக்கு வந்து சிறப்பான அறிக்கையை வெளியிட்டனர். இதுதான் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் யாழ்ப்பாணத்தில் 37 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதியை நாம் திறந்தோம். இப்படி பல நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அதற்காக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும். காணாமற்போனோர் விவகாரத்தில் தலையிட்டுள்ளோம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதி வழங்கப்படும், இறந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை பாதுகாக்கப்பட்டுள் எது நிகழ்நிலைக் காப்புச்சட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். நாம் அதிகாரத்துக்கு வந்த பிறகு இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்க இடமளிக்கவில்லை புதிய பயணம் தொடர்பில் நம்பிக்கை வழங்கியுள்ளோம்- என்றார்.