இலங்கை
தமிழ் அரசியற்கைதிகளின் விடியலுக்கு அணிதிரள்வோம்; குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு

தமிழ் அரசியற்கைதிகளின் விடியலுக்கு அணிதிரள்வோம்; குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு
சிறைகளுக்குள் கொலைசெய்யப்பட்ட தமிழ் அரசியற்கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத்தரப்பினரும் தவறாது பங்கேற்று ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச்சேர்ப்போம்.
இலங்கை. ஜனநாயக சோசலிசக் குடியரசு எனும் பெயரைத் தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்வரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த எமது உறவுகளான தமிழ் அரசியற்கைதிகளை உணர்வு பூர்வமாக மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியற்கைதிகளை நாம் மறந்து விடலாகாது. 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற்கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்- என்றார்.