இலங்கை
விடுதலைப்புலிகள் காலத்து சேரன் அரிசி ஆலை; மீளியக்க நடவடிக்கை

விடுதலைப்புலிகள் காலத்து சேரன் அரிசி ஆலை; மீளியக்க நடவடிக்கை
விடுதலைப்புலிகள் காலத்தில் பயன்பாட்டிலிருந்த சேரன் அரிசி ஆலையை மீண்டும் இயங்கச்செய்து தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.
கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுக்குளம் மற்றும் அதை அண்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் குறித்த பகுதிக்குக் களவிஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்தார்.
இதன்போது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்கள் அதிலிருந்து மீண்டுவருவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என்று அந்தப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்குக் கடற்றொழில் அமைச்சர் பிரதேச செயலாளரைத் தொடர்புகொண்டு அவர்களால் இனங்காணப்பட்ட காணியில் விளயாட்டு மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் விடுதலைப்புலிகள் காலத்தில் சேரன் அரிசி ஆலையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்தனர் என்றும் தற்பொழுது அவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்தநிலையில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் மக்களுக்காக அந்த அரிசி ஆலையை மீளவும் இயக்கி தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.