இலங்கை
ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து பறந்த கடிதம்

ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து பறந்த கடிதம்
கடற்றொழில் நடவடிக்கைகளுக்கான உற்பத்திச் செலவினங்கள் உயர்வடைந்திருப்பதனால் கடற்தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்தால் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் கழிவில் கடற்றொழிலாளர்களுக்கென எரிபொருள் வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது
கடற்றொழில் நடவடிக்கைகளின்போது உற்பத்திச் செலவினங்கள் அதிகரித்துக் காணப்படுவதால், கடற்றொழிலாளர்கள் பலர் கடற்றொழிலில் ஈடுபடுவதில் அதிக ஆர்வங்கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
மேற்படி நிலைமையை மாற்றியமைக்கின்ற வகையில், தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக, டீசல் மற்றும் மண்ணெண்ணெய்யின் சந்தை விலையிலிருந்து ஒரு லீற்றருக்கு 25.00 ரூபா கழிவில் கடற்றொழிலாளர்களுக்கென எரிபொருள் வழங்கும் திட்டம் ஒரு பரீட்சார்த்தத் திட்டமாக 6 மாத காலங்களுக்கு முதலில் வழங்குவதற்கென கொண்டுவரப்பட்டது.
இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடற்றொழிலாளர்களிடையே வரவேற்பும், கடற்றொழிலின்பாலான ஓரளவு ஈர்ப்பும் ஏற்பட்டிருந்தது.
தற்போது இந்தத் திட்டம் நடைமுறையில் இல்லை எனக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் நடைமுறைப்படுத்துவதானது, தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையுமென நினைக்கின்றேன்.
அத்துடன், பலநாள் களங்களுக்கான மீனின் இரையின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால், பலநாள் களங்கள் பலவற்றின் செயற்பாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன.
எனவே மீனின இரைகளின் உற்பத்தியை தேசிய ரீதியில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, அதுவரை மீனின இரைகளை இறக்குமதி செய்கின்றபோது ஏற்கனவே இருந்ததுபோல் அதற்குரிய இறக்குமதி வரியை நீக்குவதற்கு அல்லது போதியளவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், பலநாள் களங்களின் மூலமான மீனின உற்பத்திகளை அதிகரிப்பதோடு, அதிக வெளிநாட்டு செலாவணியையும் ஈட்டிக்கொள்ள முடியும்
மேற்படி விடயங்கள் தொடர்பில் நீங்கள் சாதகமான முடிவுகளை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.