இலங்கை
பிரமிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம்; எச்சரிக்கும் இலங்கை மத்திய வங்கி

பிரமிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம்; எச்சரிக்கும் இலங்கை மத்திய வங்கி
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது இயங்கும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் போதுமானதாக இல்லை எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று (09) கொழும்புக் கோட்டையில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரியவந்தது.
எனினும் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் முடிந்தவரை பலருக்குத் தெரியப் படுத்துவதும், இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர்களைத் தடுப்பதும் மத்திய வங்கியின் நோக்கமாகும் என இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் தில்ருக்ஷிணி குறிப்பிட்டுள்ளார்.
அதோடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், இந்த மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பிரமிட் எதிர்ப்பு வாரத்தை நடத்தவும் இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, சட்டவிரோத பிரமிட் திட்டங்களுக்கு இரையாகாதீர்கள் எனக் கூறி, இந்த வாரம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரம் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
அதேசமயம் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் சிக்கி பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் மக்களை மீட்கும் நோக்கில், ஊடகங்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் இந்தப் பயிலரங்கு நடைபெற்றது