இலங்கை
பொலிஸ் சீருடையில் ‘ரிக்ரொக்’; இளைஞருக்கு விளக்கமறியல்!

பொலிஸ் சீருடையில் ‘ரிக்ரொக்’; இளைஞருக்கு விளக்கமறியல்!
பொலிஸ் சீருடை அணிந்து சமூக வலைத்தளமான ‘ரிக்ரொக்’கில் வீடியோ வெளியிட்ட இளைஞரை, ஜூலை மாதம் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக பல்வேறு சர்ச்சையான வீடியோக்களை அண்மைக் காலமாக வெளியிட்டு வந்திருந்தார். அவருக்கு எதிராக பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்தல் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மன்னார் நீதிவான் நீதிமன்றில் மடு பொலிஸார் நேற்று ‘பி’ அறிக்கை தாக்கல் செய்தனர்.
வழக்கு மன்னார் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆதரவாக மன்னார் சட்டத்தரணிகள் முன்னிலையானதுடன் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை. பொலிஸாரின் சமர்ப்பணத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அவற்றிலும் அந்த இளைஞர் முன்னிலையாகத் தவறியிருந்தார். இதனால், சந்தேகநபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள் உள்ளன. இந்த விடயத்தையும் நீதிமன்றத்தின் கவனத்துக்குப் பொலிஸார் கொண்டு சென்றனர். இதைக் கவனத்திலெடுத்த நீதிவான், பிணைக் கட்டளைச் சட்டம் 14ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பிணைகளையும் இரத்துச் செய்தும் உத்தரவிட்டார்.