இலங்கை
பொலிஸ் சீருடை அணிந்து டிக்டொக்கில் வீடியோ ; சமூக வலைத்தள வெளியான சர்ச்சை

பொலிஸ் சீருடை அணிந்து டிக்டொக்கில் வீடியோ ; சமூக வலைத்தள வெளியான சர்ச்சை
பொலிஸ் சீருடை அணிந்து சமூக வலைத்தளமான டிக்டொக்கில் (Tiktok) காணொளி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய காவலாளியை எதிர் வரும் ஜூலை 22ஆம் திகதிவரை விளக்கமறயலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
குறித்த காவாலி மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ள நிலையில் அவற்றில் முன்னிலையாகத் தவறியதால் 25இற்கு மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள் உள்ளதனை சுட்டிக்காட்டி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்தை கவனத்தில் எடுத்த நீதிவான் நீதிமன்று பிணைக் கட்டளைச் சட்டம் 14ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட பிணைகளை நிராகரித்தும் கட்டளையிட்டது.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக பல்வேறு சர்ச்சையான காணொளிகளை வெளியிட்டு வந்த வவுனியா – ஒமந்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுமாரன் சிவகரன் என்பவரே இவ்வாறு மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
நீதிபதியுடன் சந்திப்பு என்ற சர்ச்சைக்குரிய காணொலியையும் குறித்த நபரே வெளியிட்டிருந்தார்.
அரச உத்தியோகத்தரான பொலிஸார் அணியும் சீருடையை அணிந்து ரிக்ரொக் காணொலியை உருவாக்கி வெளியிட்ட குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 167 மற்றும் 168ஆம் பிரிவுகளின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்தல் என்ற அடிப்படையில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் மடு பொலிஸார் இன்று B அறிக்கை தாக்கல் செய்தனர்.
வழக்கு மன்னார் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆதரவாக மன்னார் சட்டத்தரணிகள் முன்னிலையானதுடன் சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை.
சந்தேக நபர் சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களினால் 25இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று மடு பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, சந்தேக நபர் பிணை கட்டளைச் சட்டம் 14ஆம் பிரிவை மீறிய உள்ளிட்ட காரணங்களையும் கவனத்தில் எடுத்து அவரை வரும் ஜூலை 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.