இலங்கை
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு போராட்டத்திற்கு அழைப்பு

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு போராட்டத்திற்கு அழைப்பு
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் விடுத்துள்ளார்.
இவ்வழைப்பில் , இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் மேற்கொள்ளப் படுவதற்கு மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப் புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டே செல்கிறது.
இவற்றில் இதுதீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை.
இவ்வாறாணதொரு சூழ்நிலையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தாணிகரின் வருகை பின்னர் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் எமது தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க கூடிய ஆரோக்கியமான விடயங்கள் உள்ளடக்கப் படவில்லை என்பதை இட்டு வருத்தப் படுகிறோம்.
அத்துடன் அண்மையில் ஐ.நா.சபையின் இலங்கைக்கான வாதிவிடப் பிரதியால் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய ஊடக நேர்காணல் கூட எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையாக அமையாத நிலையை நாங்கள் ஊடக செய்திகள் ஊடாக பார்க்கிறோம்.
இலங்கை அரசின் உள்ளக பொறி முறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப் போவதில்லை மாறாக சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதனை வலியுத்தி பல தடவைகள் இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரி வருகின்றோம்.
இந் நிலையில் ஐ. நா இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக பொறி முறைகள் ஊடகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தினை தங்களது அறிக்கைகளிலும், ஊடக நேர் காணல்களிலும் குறிப்பிடுவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய எண்ணி உள்ளோம்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரின் பங்களிப்பினை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம் என்றார்.