பொழுதுபோக்கு
55 வயது பெண் சின்ன பையன லவ் பண்ற மாதிரி; ‘சின்னத்தம்பி’ உருவானது இங்குதான்: மனோரமா மெமரீஸ்!

55 வயது பெண் சின்ன பையன லவ் பண்ற மாதிரி; ‘சின்னத்தம்பி’ உருவானது இங்குதான்: மனோரமா மெமரீஸ்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் முடிசூடா ராணியாக வலம் வந்தவர் மனோரமா. ஆச்சி மனோரமா என அன்புடன் அழைக்கப்படும் இவர், பல தசாப்தங்களாகத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் மனங்களை வென்றவர். மனோரமாவின் நடிப்பு திறமைக்கு தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் போன்ற பட்டங்களும் கிடைத்தது. அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி, கின்னஸ் சாதனை படைத்தார். 5000 மேடை நாடகங்கள், எக்கச்சக்கமான பாடல்கள் என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா. அவரது நடிப்பை புகழாத கலைஞர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு நடிப்பில் உச்சம் தொட்டவர். நடிகைகள் பலருக்கும் முன் உதாரணமாகவும் அவர் திகழ்கிறார். ஆச்சி மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது ஆன்மாவும், அவர் ஈட்டிய புகழும் தமிழ் திரையுலகை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அவரது பழைய பேட்டிகள் பல சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், ஆச்சி மனோரமா 55 வயது பெண்ணாக கிழவன் வேடத்தில் இருக்கும் சின்ன வயது சத்யராஜை காதலிக்கும் ‘நடிகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, ‘சின்னத்தம்பி கதை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி பேசியிருப்பார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதள பக்கத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகன் படம் கடந்த 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியான குஷ்பூ-வுக்கு உறுதுணையாக இருந்து அவரை வளர்த்து வருவார் மனோரமா. அம்மாவின் ஆபரேஷனுக்கு உதவிட ரூ.3000 ஆயிரம் சம்பளத்துக்கு இளம் வயது சத்யராஜ், கிழவன் வேடத்தில் பாட்டு வாத்தியாராக வருவார். அப்போது, மனோரமா பாட்டு வாத்தியார் சத்யராஜுடன் காதல் வயப்படுவார். அவர்களுக்கு இடையே வரும் காட்சிகள் பலவும் காமெடியாக இருக்கும். ஆனால், மனோரமா 1991-ல் வெளிவந்த சின்னத்தம்பி கதை படத்தில் விதைவயாகவும், ஏழைத் தாயாகவும் நடித்திருப்பார். பிரபு – குஷ்பூ நடித்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இளையராஜா மெட்டமைத்த பாடல்கள் இன்றளவும் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வீடியோவில் மனோரமா, “பி.வாசு இயக்கிய ‘நடிகன்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தில் 50, 55 வயது இருக்கும் பெண் ஒரு சின்னப் பையனை லவ் செய்வது போல் இருக்கும். ஆனால், அவர் சின்ன பையன் என்பது எனக்கு தெரியாது வயதான கிழவனைப் போல் என்னிடம் நடிப்பார். படத்தில் எனக்கு செவ்வாய் தோஷம். அதேபோல் அவருக்கும் செவ்வாய் தோஷம். இதை இருவரும் சொல்லிக் கொள்வது போல் சீன் இருக்கும். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, பி.வாசு சின்னத் தம்பி படத்தின் கதையை என்னிடம் அங்கே சொன்னார். ஆனால், நான் அப்போது நடித்துக் கொண்டிருக்கும் கேரக்டருக்கும், சின்னத் தம்பி படத்தில் வரும் கேரக்டருக்கும் ரொம்ப வித்தியாசம் இருந்தது. வாசு என்னிடம் இது எப்படி சரியாக வரும் என்பது போல் கேள்வி கேட்டார். ஆனால், நான் அவரிடம் எல்லாம் சரியாக வரும். அதனை நான் செய்து காட்டுகிறேன் என்று சொன்னேன். அதேபோல், சின்னத் தம்பி படத்தில் நான் நடித்த ரோல் நன்றாக வந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.