பொழுதுபோக்கு
காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஷூட்டிங்… வேலைன்னு வந்துட்டா இப்படித்தான்: சரோஜாதேவி நினைவுகள்

காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஷூட்டிங்… வேலைன்னு வந்துட்டா இப்படித்தான்: சரோஜாதேவி நினைவுகள்
இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை சரோஜா தேவி. கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.1960 மற்றும் 70 களில் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் இவர், அன்றைய முன்னணி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் படங்களில் சரோஜா தேவி நடித்திருந்தார். இவருக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது. இவருக்கு இந்திரா, கவுதம் ராமசந்திரன் என்ற பிள்ளைகள் உள்ளனர். ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தனது நடிப்பிற்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றார். 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதைப் பெற்றிருந்தார். இந்நிலையில், இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை சரோஜா தேவி. வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு பலவேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சரோஜாதேவி நினைவுகள்இந்நிலையில், அறிமுக நடிகையாக இருந்தாலும் தனது காலில் கண்ணாடி கிழித்து ரத்தம் கொட்டியபோது எம்.ஜி.ஆர், பதறிப்போய் தனக்கு முதல் உதவி செய்தார் என்று நடிகை சரோஜா தேவி உணர்வுப்பூர்வமாக தெரிவித்து இருந்தார். எம்.ஜி.ஆர் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள சரோஜா தேவி, கச்ச தேவயானி படத்தில் நடித்தப்போது தான் முதன்முறையாக எம்.ஜி.ஆரை பார்த்தேன்.அப்போது முதன்முறை எம்.ஜி.ஆர் என்னிடம் பேசியபோது கன்னடத்தில் உரையாடினார். அதன்பிறகு திருடாதே படத்தின் தயாரிப்பாளரிடம் என்னை பற்றி சொல்லி அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதன்பிறகு போட்டோஷூட் நடத்தி எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த படத்தில் முதல்முறையாக எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பின்போது கண்ணாடி என் காலில் குத்தி ரத்தம் வந்தது. அதை நான் யாரிடமும் சொல்லவில்லை.அப்போது எம்.ஜி.ஆர் இதை கவனித்து உடனடியாக முதலுதவி செய்தார். அவரது தொடை மேல் என் காலை எடுத்து வைத்து, அவரது கர்ச்சீப்பால் ரத்தத்தை துடைத்து விட்டார். நான் அப்போது பெரிய நடிகையாக இல்லாதப்போதும் எம்.ஜி.ஆர் இதைச் செய்தார். பின்னர் நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது. திருடாதே படத்தில் நடித்தப்போது எம்.ஜி.ஆர் எனக்காக காத்திருப்பார். எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளேன். எம்.ஜி.ஆர் என்னுடைய அன்பு தெய்வம் என்று கூறியுள்ளார்.எம்.ஜி.ஆருடன் நானே தொடர்ந்து நடித்து வந்ததால், பிற நட்சத்திரங்கள் அதைப் பற்றி பேசத் தொடங்கினார். அதனால் தான் வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கவில்லை. சின்னப்பத் தேவர், எம்.ஜி.ஆர் எல்லாம் எனது கால்சீட்டுக்கு ஏற்ப எனக்கு ஒத்துழைத்தனர். கால்சீட் இல்லாததால் ஜெய்சங்கருடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை என்று சரோஜா தேவி கூறியுள்ளார்.