இலங்கை
பரீட்சை பெறுபேறுகள் மட்டுமே கல்வி அல்ல – பிரதமர் வெளிப்படை!

பரீட்சை பெறுபேறுகள் மட்டுமே கல்வி அல்ல – பிரதமர் வெளிப்படை!
பரீட்சை பெறுபேறுகள் மூலம் மட்டுமே கல்வியை அளவிடும் முறை மிகவும் தவறானது என்றும், அந்த முறையை மாற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற உயர் கல்வியின் அடிப்படைகளை அர்த்தமுள்ளதாக்கி பிள்ளைகளின் நற்பண்புகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட பொலன்னறுவை மாவட்ட “பங்கஜ மாணவர் மாநாடு 2025” நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
பரீட்சை மையமான கல்வி முறையை மாற்றுவதன் மூலம் திறமையுள்ள பிள்ளைகளுக்கு தமது ஆற்றலினாலும் திறமையாலும் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான கல்வி முறையை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணித்துள்ளோம்.
இன்று இந்தக் குழந்தைகளின் படைப்பாற்றலையும் திறமையையும் பார்த்து நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
நமது நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள மிகவும் திறமையான பிள்ளைகள் குழு உள்ளது என்பதை இந்த நேரத்தில் நான் கூற விரும்புகிறேன்.
நீங்கள் தான் எங்களுக்கு வேலை செய்ய சக்தியைத் தருகிறீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு உணர்வுபூர்வமான, நல்ல மனப்பான்மையுள்ள சமுதாயத்தை உருவாக்க அர்ப்பணித்துக்கொள்வோம்.” என்று பிரதமர் கூறினார்.