இலங்கை
யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு!

யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு!
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் கூட்டுப்பாய்ச்சல்
யாழ் மாவட்டச் செயலர் தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். அவை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் குவிந்தபடி உள்ளன என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவரான வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. அப்போது ஒருகட்டத்தில், யாழ். மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மணல் கடத்தலின்போது கைப்பற்றப்பட்ட வாகனத்தை விடுவிக்க யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் பணித்ததாக நான் அறிந்தேன்’ என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டினார். இதனை மறுதலித்த மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன். ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் இவ்வாறு கதைக்கக் கூடாது. நான் அவ்வாறு எதுவிதமான செயலிலும் ஈடுபடவில்லை’ – என்றார். இதனையடுத்து ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கருணைநாதன் இளங்குமரன், ‘இங்குள்ள பலர் பக்கச்சார்பாக நடக்கின்றனர். இதனால் பல பிரதேச செயலாளர்களும், நிர்வாக அதிகாரிகளும் பழிவாங்கப்படுகின்றனர். அந்தப் பழிவாங்கலால் திட்டமிட்ட இடமாற்றங்களுக்கும் உட்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.
அதனை ஆமோதித்த அர்ச்சுனா எம்.பி. “யாழ்.மாவட்டச் செயலரின் பழிவாங்கலால் தாம் பாதிக்கப்பட்டுள்ளனரென எட்டு பிரதேச செயலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்” – என்றார். அதனைத் தொடர்ந்து ஆளும்கட்சி எம்.பி.க்களான பவானந்தராஜா, இளங்குமரன் ஆகியோர் மாவட்டச்செயலர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அத்துடன், பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்து, வடக்கு ஆளுநர் தலைமையில் குழு அமைத்து இடமாற்றங்களை தீர்மானிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. எனினும் முடிவேதுமின்றி கூட்டம் அவசர அவசரமாக முடிவுறுத்தப்பட்டது.