இலங்கை
விகாரைக்குள் புதிய கட்டுமானம்; காட்டிக்கொடுத்தது கிடங்கு

விகாரைக்குள் புதிய கட்டுமானம்; காட்டிக்கொடுத்தது கிடங்கு
காங்கேசன்துறை -தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் புதிய கட்டுமானம் ஒன்றுக்காக குழியொன்று (கிடங்கு) வெட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு பிரதேசசபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பிரதேசசபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் தீர்மானம் ஒன்றை முன்வைத்தார். குறித்த தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வன்னியசிங்கம் பிரபாகரன், குறித்த வழக்கில் பிரதேசசபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத் தரணி எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாக வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார். இதற்குப் பதில் வழங்கிய தவிசாளர் குறித்த வழக்கில் பிரதேசசபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந் திரன் இலவசமாகவே செய்வார் என சபையில் வாக்குறுதியை வழங்கினார். இதனையடுத்து சட்டநடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலி. வடக்கு பிரதேசசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.