இந்தியா
கொடூரங்களின் சான்றாக செம்மணிப் புதைகுழி; சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவும்

கொடூரங்களின் சான்றாக செம்மணிப் புதைகுழி; சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவும்
சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவும்- நடிகர் கருணாஸ் வலியுறுத்து
செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணிப் புதைகுழிக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தென்னிந்தியப் பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான சேது கருணாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள் கிடைக்கும். ஆனால் ஈழதேசத்தில் மட்டும் தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதற்கு சமகாலத்தில் செம்மணி மனிதப் புதைகுழியை விட சர்வதேச சமூகத்துக்கு வேறென்ன சான்று வேண்டும். பள்ளிச்சிறுவர்களின் புத்தகப்பை, பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு கொடுமையின் உச்சத்தைத் தொடுகிறது. வதைக்கப்பட்ட, புதைக்கபட்ட, வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட அத்தனையையும் செம்மணியில் எலும்புக்கூட்டின் சாட்சியங்கள் எடுத்தியம்புகின்றன. அண்டை நாட்டில் நிகழ்ந்த அநீதிக்கு ஐ.நா. அவையில் குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மணி மனிதப் புதைகுழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டு கோள்விடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்- என்றார்.