இந்தியா
சம்பளம் கூட வாங்கவில்லை… வங்க மொழி பேசியதால் தமிழ்நாட்டில் தாக்குதல்; மேற்குவங்க தொழிலாளர்கள் புகார்!

சம்பளம் கூட வாங்கவில்லை… வங்க மொழி பேசியதால் தமிழ்நாட்டில் தாக்குதல்; மேற்குவங்க தொழிலாளர்கள் புகார்!
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், வங்காள மொழியில் பேசியதால் வங்கதேசத்தவர்கள் என தவறாக நினைத்து உள்ளூர் மக்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜன் ஷேக், அவரது சகோதரர் மிலன் ஷேக், சஹில் ஷேக், மற்றும் பாபு ஷேக் ஆகியோர் கட்டுமானப் பணிக்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர். இவர்கள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி மாலை, திருவள்ளூரில் இருந்தபோது, ஒரு குழுவினர் அவர்களின் பெயரையும், சொந்த ஊரையும் கேட்டு விசாரித்துள்ளனர்.அப்போது, “இவர்கள் வங்காள மொழியில் பேசுவதைக் கேட்டவுடன், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகித்து, இரும்பு கம்பிகள் மற்றும் லத்திகளால் தாக்கியுள்ளது. இந்த தகவலை சுஜனின் தந்தை தனது புகாரில் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, 4 இளைஞர்களும் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலுதவி சிகிச்சை பெற்று உடனடியாக முர்ஷிதாபாத் திரும்பியுள்ளனர்.இது குறித்து சுஜன் மற்றும் மிலனின் தந்தை அஷபுல் ஷேக் முர்ஷிதாபாத்தில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு தொலைபேசி மூலம் கூறுகையில், “என் இரண்டு மகன்களையும், மற்ற இருவரையும் அவர்கள் வங்காள மொழியில் பேசியதால் அவர்கள் சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டனர். என் இளைய மகனின் இடது கை உடைந்துவிட்டது. அவர் இன்னும் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் மூத்த மகனும் காயமடைந்து பல நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து, மிலன் கூறுகையில், நாங்கள் பேசிய மொழியை கேட்டவுடன் உள்ளூர்வாசிகள் எங்களை தாக்கினார்கள். நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். 11 நாட்கள் வேலை செய்ததற்கான கூலிகூட நாங்கள் இன்னும் வாங்கவில்லை. சென்னைக்கு வேலைக்காக வந்தது இதுதான் முதல் முறை. வீட்டிற்குத் திரும்ப ரூ.12,000 அனுப்பும்படி என் தந்தையிடம் கேட்டு வாங்கிக்கொண்டு தான் சொந்த ஊர் திரும்பினோம் என்று கூறியுள்ளார்.இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் உள்ள இட்டாஹர் சட்டமன்ற உறுப்பினர் மொசரஃப் ஹுசைன், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக தனது தொகுதியில் உள்ள பேட்டர் சாத்தி பேருந்து நிலையத்தில் ஒரு உதவி மையத்தைத் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என் பகுதியிலிருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் ஹரியானா போன்ற பிற மாநிலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே நாங்கள் ஒரு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளோம். குடியிருப்புச் சான்றுகளுக்குத் தேவையான ஆவணங்கள் குறித்து குடும்பங்களுக்கு நாங்கள் உதவி செய்து வழிகாட்டுகிறோம்.ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு குடியிருப்புச் சான்றிதழ்களை வழங்குகிறேன். போலீஸ் க்ளியரன்ஸ் சான்றிதழுக்காக காவல்துறையை அணுகுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த உதவி மையம் புதன்கிழமை செயல்படத் தொடங்கி, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.