இலங்கை
கிளிநொச்சியில் டிஜிட்டல் முறையிலான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அறிமுகம்!

கிளிநொச்சியில் டிஜிட்டல் முறையிலான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அறிமுகம்!
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் மக்கள் தொகை திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையிலான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஏற்பாட்டில் டிஜிட்டல் செயற்றிட்டத்தின் மூலம் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டமானது நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு வலய பிரதி பதிவாளர் நாயகம் ப.பிரபாகர் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு.முரளிதரன் கலந்து கொண்டார். மேலும் வடக்கு வலய உதவிப்பதிவாளர் நாயகம் தாரகா பிறேம்ஆனந்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)அஜிதா பிரதீபன், பச்சிலைப்பள்ளி, கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் பாரம்பரிய காகித சான்றிதழைக் காட்டிலும் அதிநவீன, பாதுகாப்பான ஆவணமாகும்.
போலி ஆவணங்களைக் குறைக்க அழிக்க முடியாத தகவல் தரவு அமைப்புகளின் சேமிப்பாகும். வெளிநாட்டு பயணம் மற்றும் சட்டப் பணிகளுக்கு சர்வதேச அளவில் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதோடு, சிங்கள மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றிதழைப் பெறுவதன் மூலம் பிறப்புச் சான்றிதழ்களின் தனி மொழிபெயர்ப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.
பிறப்புச் சான்றிதழின் எந்தவொரு திருத்தமும் செய்யப்படும்போது, தகவல் தரவு அமைப்பு புதுப்பிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை