இலங்கை
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை
மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீர் பிரச வலி ஏற்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
ஓமன் தலைநகரான மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கடந்த திங்கள் அதிகாலை 3.15 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்தபோது, தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
வழக்கமாகக் கேபினில் கிடைக்கும் வசதிகள் இவற்றுக்கு போதுமானதல்ல என்றாலும், விமான ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, விமானக் கேபினில் ஒரு தனியறையை தயார் செய்தனர்.
மேலும், விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அனுப்பினார்.
இந்த நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த மருத்துவ துறையைச் சேர்ந்த தாதி ஒருவர் முன்வந்து, விமான ஊழியர்களின் உதவியுடன் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைப்பார்த்த பயணிகள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். இந்தநிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் தாய், குழந்தை இருவரும் அங்கு தயாராக இருந்த நோய்காவு வண்டியில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாய், சேய்க்கு தேவையான உதவிகளை செய்ய தாய்லாந்து தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.