பொழுதுபோக்கு
‘பேத்தி என்றாலும் நீயும் என் தாய்’: பாட்டி பாசத்தை உருக்கமாக கூறிய எவர்கிரீன் பாடல்

‘பேத்தி என்றாலும் நீயும் என் தாய்’: பாட்டி பாசத்தை உருக்கமாக கூறிய எவர்கிரீன் பாடல்
எப்பொழுதுமே மனம் கவர்ந்த திரைப்படங்களைப் பற்றியும், மிகவும் ரசித்த சில பாடல்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்வது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். அந்த வகையில், கே. சித்ரா பாடிய ‘பூவே பூச்சூடவா’ திரைப்படத்தில் இருக்கும் பாடலின் ஆழமான வரிகள் பற்றி தொகுப்பாளர் ஆதவன் திரைக்குரல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 1985-ல் ஃபாசில் அவர்கள் இயக்கத்தில் வந்த இந்தப் படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. ஒரு பேத்திக்கும் பாட்டிக்கும் இடையிலான உறவு, அவர்களுக்குள்ளான உணர்ச்சிபூர்வமான பிணைப்புதான் இப்படத்தின் மையக்கரு ஆகும். மலையாளத்தில் மோகன்லால் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தமிழில் பெரிய கதாநாயகர்கள் யாரும் நடிக்கவில்லை. எஸ்.வி. சேகர் சார் அப்படிக் ஒரு சிறிய ரோலை மிக அருமையாக செய்திருப்பார். இந்த படத்தில் பத்மினி, நதியா, எஸ். வி. சேகர், ஜெய்சங்கர் மற்றும் நிறைய குட்டிப் பசங்களும் நடித்து இருப்பார்கள். இந்த படத்தின் சிறப்பு ‘பூவே பூச்சூடவா’ பாடல். ஜேசுதாஸ், சித்ரா அம்மா இருவரும் பாடிய பதிப்பும் அருமையாக இருக்கும். ஒரு கதையின் உணர்வை சில காட்சிகளிலோ, வசனங்களிலோ சொல்வதை விட, ஒரு பாடலின் ஒரு வரியில் சொல்லிவிடலாம் என்பார்கள். அந்த வகையில், இந்தப் படத்தின் மொத்த கதையையும் ஒரு அருமையான வரியில் சொல்லிவிட்டார்கள். அந்த பாட்டி தன் பேத்திக்காக ஏங்கிக் கொண்டிருப்பார். திருமணம் செய்துவிட்டு கணவன் அவளை அழைத்துச் சென்றதும், பேத்தி பார்க்கவே வரவில்லை. தான் எவ்வளவு நாள் காத்திருந்தேன் என்பதை பத்மினி கதாபாத்திரத்தில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.”அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன். தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை, கண்ணில் வெண்ணீரை வார்ப்பேன். கண்களும் ஓய்ந்தது, ஜீவனும் தேய்ந்தது. ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய். இந்த கண்ணீரில் சோகம் இல்லை, இன்று ஆனந்தம் தந்தாய். பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.”இந்த வரிகள் மிகவும் ஆழமானவை. “அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்” – அந்த பாட்டிக்கு தன் பேத்தி ஒரு நாள் கதவைத் தட்டுவாள் என்ற எண்ணம் அத்தனை வருடங்களாக இருந்திருக்கிறது. யார் வீட்டில் அழைப்பு மணி அடித்தாலும், ஓடிப் போய் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பாள்.”கண்களும் ஓய்ந்தது, ஜீவனும் தேய்ந்தது” – அப்படியே பார்த்துப் பார்த்து அந்த ஏக்கத்தில் கண்கள் தவித்திருக்கின்றன. வயதாகி, உயிர் தேய்ந்திருக்கும் நேரத்தில், “ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்” – வாழ்க்கை முடிவுக்கு வரும் நேரத்தில், “நீயும் நெய்யாக வந்தாய்” – நதியா கதாபாத்திரம் வந்ததும் பாட்டிக்கு ஒரு புத்துணர்ச்சி. தான் இளமையாக உணர்வாள்.”இந்த கண்ணீரில் சோகம் இல்லை, இன்று ஆனந்தம் தந்தாய்” – ஆனந்தக் கண்ணீரை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்கள். “பேத்தி என்றாலும் நீ என் தாய்” – இந்த வரிதான் பாடலின் உச்சம்.1985களில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், கமர்ஷியல் சண்டைகள் என்று இருந்த காலகட்டத்தில், மகேந்திரன், ஃபாசில், பாலுமகேந்திரா, பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் கதையை மையமாகக் கொண்டு அருமையான திரைப்படங்களை எடுத்தனர். அப்படிப்பட்ட ஒரு புரட்சிகரமான கதைதான் இந்த ‘பூவே பூச்சூடவா’. இத்தகைய அற்புதமான வரிகளை எழுதிய வைரமுத்துவின் வரிகள் மனதுக்கு இதமாக இருக்கும்.