இலங்கை
மருத்துவர்களுக்கான பணியிடமாற்றம் – பல மருத்துவமனைகள் முடங்க வாய்ப்பு!

மருத்துவர்களுக்கான பணியிடமாற்றம் – பல மருத்துவமனைகள் முடங்க வாய்ப்பு!
தரப்படுத்தப்பட்ட மருத்துவர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு காரணமாக அரச மருத்துவமனைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பல மருத்துவமனைகள் முடங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் சுகாதார சேவையை உயர் தரத்தில் வழங்க அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும் அவசியமான மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.
எனினும் நீண்ட காலமாக மருத்துவர்களுக்கான பணியிட மாற்றம் வழங்கப்படாமையால் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அந்தவகையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரப்படுத்தப்பட்ட மருத்துவர்கள் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் தற்போது கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுதே பணியாற்றி வருகின்றனர்.
இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல அரச மருத்துவமனைகளின் சேவைகள் எதிர்வரும் நாட்களில் முடங்க வாய்ப்புள்ளது.
சுகாதார அமைச்சின் பின்புல அதிகாரம் மற்றும் கட்டுப்பாடுகளற்ற செயற்பாடுகள் காரணமாக சுகாதார சேவை நாளுக்கு நாள் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.