தொழில்நுட்பம்
12 நிமிடங்களில் 80% சார்ஜ், 5 லட்சம் கி.மீ. உழைக்கும் புதிய பேட்டரி… EV-யின் ஃபாஸ்ட் சார்ஜிங் புரட்சி!
12 நிமிடங்களில் 80% சார்ஜ், 5 லட்சம் கி.மீ. உழைக்கும் புதிய பேட்டரி… EV-யின் ஃபாஸ்ட் சார்ஜிங் புரட்சி!
எலெக்ட்ரிக் கார் வைத்திருக்கும் பலருக்கும் இருக்கும் ஒரே கவலை, அது சார்ஜ் ஆக எடுத்துக்கொள்ளும் நீண்ட நேரம்தான். ஆனால், இனி அந்த கவலை தேவையில்லை. ElevenEs என்ற ஐரோப்பிய நிறுவனம், edge574 blade cell என்ற புதிய பேட்டரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.மின்னல் வேகத்தில் சார்ஜ்!இந்த புதிய பேட்டரியின் மிகப்பெரிய அம்சம், அதன் சார்ஜிங் வேகம். வெறும் 12 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் ஆகிறது. வினாடிக்கு ஒரு கிலோமீட்டர் பயணம் செய்யும் சக்தியைத் தருகிறது. அதாவது, நீங்கள் ஒரு காஃபி குடிக்கும் நேரத்தில், உங்கள் கார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கத் தயாராகிவிடும். குளிர்காலத்தில் கூட இதன் செயல்திறன் குறையவில்லை. 10°C வெப்பநிலையில் 18 நிமிடத்திலும், 0°C வெப்பநிலையில் 25 நிமிடத்திலும் சார்ஜ் ஆகி, நம்பமுடியாத அளவுக்கு வேகமாக இயங்குகிறது.ஆயுளும் அதிகம்… பாதுகாப்பும் அதிகம்!இந்த பேட்டரி வெறும் வேகமான சார்ஜிங் திறனை மட்டும் கொண்டிருக்கவில்லை. இது 500,000 கிலோமீட்டர்கள் வரை உழைக்கும் திறன் கொண்டது. இது ஒரு பெட்ரோல் காரின் இன்ஜின் ஆயுளை விட அதிகம். இதனால் பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. செலவும் குறையும். அத்துடன், இந்த பேட்டரி -30°C முதல் +60°C வரையிலான அதிக வெப்பநிலையையும் தாங்கும். இதனால், மிக குளிர்ச்சியான அல்லது வெப்பமான பகுதிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.எப்படி இது சாத்தியம்?லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பேட்டரியில், சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்பு காரணமாக, பேட்டரிக்குள் வெப்பம் குறைவாகவே உற்பத்தியாகிறது. அயனிகளின் இடமாற்றம் சிறப்பாக நடப்பதால், பேட்டரியின் ஆயுள் கூடுகிறது. எடை குறைவான, உறுதியான உலோக உறையைக் கொண்டுள்ளதால், இது கார்களின் வடிவமைப்பிற்கு ஏற்றதாக உள்ளது.பிளேடு செல் வடிவமைப்பு, நவீன வாகனங்களுக்கு ஏற்றது. இந்த உயரமான மற்றும் மெல்லிய அமைப்பு, அதிக ஆற்றல் அடர்த்திக்கு (190 Wh/kg) வழிவகுக்கிறது. இந்த வடிவமைப்பு, கார்களை மெல்லியதாகவும், எடை குறைவாகவும் உருவாக்க உதவுகிறது. மேலும், பயணிகளுக்கும் பொருட்களுக்கும் அதிக இடம் கிடைக்கிறது.இந்த புதிய பேட்டரி, எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களை மிகவும் எளிமையாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றும். இனி, நீண்ட பயணங்களின்போது சார்ஜிங் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது.
