Connect with us

விளையாட்டு

ஐ.பி.எல்-ல் ஓய்வு… இங்கிலாந்து லீக் போட்டியில் களமாடும் அஸ்வின்?

Published

on

Ravi Ashwin could join The Hundred next season English media Tamil News

Loading

ஐ.பி.எல்-ல் ஓய்வு… இங்கிலாந்து லீக் போட்டியில் களமாடும் அஸ்வின்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். அனில் கும்ப்ளேவுக்கு (619) அடுத்தபடியாக, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகள் (537) வீழ்த்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ள அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்தத் தொடரில் விளையாடியுள்ள அவர், கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது அறிமுகத்தை கண்டார். 2016 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2016 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்காக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் நிறுவப்பட்டன. அதில், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடினார் அஸ்வின். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 2017 சீசனில் காயமடைந்த அவர் 2018-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தினார். 2020 சீசனுக்கு முன்னதாக, அஸ்வின் டெல்லி கேபிடல்ஸுக்கு டிரேடு முறையில் சென்றார். பிறகு, 2022 ஐபிஎல் ஏலத்தில், அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அந்த அணியில் 3 சீசன் ஆடிய அஸ்வின், இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் மீண்டும் சென்னை அணியில் ஆடினார். இந்த சீசனில் அஸ்வின் சிறப்பான செயல்படாத நிலையில், அவர் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். குறிப்பாக, 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு, முதல் முறையாக 10-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் நிலைமை அவருக்கு ஏற்பட்டது. இதனால், அஸ்வினை அடுத்த சேஷனுக்கான அணியில் இருந்து கழற்றி விட திட்டமிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான தகவல் வெளியான சில நாட்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிவோல்ட் பிரேவிஸை வாங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அஸ்வின் பேசினார். அதற்கு சி.எஸ்.கே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அஸ்வினும் தனது பங்கிற்கு விளக்கம் அளித்தார். இத்தகைய சூழலில் தான் அஸ்வின் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், ஐ.பி.எல்-லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அடுத்த சீசனில் இருந்து தி ஹண்ட்ரட் போட்டியில் இடம்பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் அவராக இருக்கலாம் என்று ஆங்கில ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. “அடுத்த சீசனின் தி ஹண்ட்ரட் போட்டியில் விளையாட அஸ்வின் ஆர்வமாக உள்ளார். அவர் எதிர்வரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல லீக்குகளில் விளையாட திட்டமிட்டுள்ளார். அந்தவகையில், தி ஹண்ட்ரட் போட்டியில் அவர் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.” என்று இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அஸ்வின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள், ஒரு ஐ.பி.எல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது, ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது. பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐ.பி.எல் நிர்வாகம் மற்றும் பி.சி.சி.ஐ-க்கும், இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அஸ்வின் 221 ஐ.பி.எல்  ஆட்டங்களில்,  187 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு ஓவருக்கு 7.20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, லீக் வரலாற்றில் ஐந்தாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன