இலங்கை
ரணிலுக்குப் பிணை!
ரணிலுக்குப் பிணை!
ஊழல் மோசடிக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் நேற்றுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அரச நிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு ரணில் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியது.
அன்றையதினம் இரவு 10.15 மணி வரை இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே உடல் நிலை மோசமடைந்ததால் ரணில் வெலிக்கடைச் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
வழக்கு நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ரணில் முன்னிலையாகவில்லை. இதனால், அவரை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னிலையாகுமாறு நீதிவான் உத்தரவிட்டார். விசாரணைகளின்போது. ரணிலுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் வழக்கு முடியும் வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா திணைக்களத்தினர் வாதாடினார்கள்.
எனினும் ரணிலுக்கு பிணை வழங்க வேண்டியதன் அவசியத்தை முன்வைத்து சட்டத்தரணிகள் குழு நீண்ட சமர்ப்பணம் செய்தது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடம்பெற்ற இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கியது. வழக்கு ஒக்ரோபர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
