Connect with us

இந்தியா

‘மோடி ஒரு சிறந்த நண்பர், ஆனால்’… டிரம்ப் டபுள் ஆக்சன்: இந்தியாவுடன் என்ன சிக்கல்?

Published

on

Donald Trump

Loading

‘மோடி ஒரு சிறந்த நண்பர், ஆனால்’… டிரம்ப் டபுள் ஆக்சன்: இந்தியாவுடன் என்ன சிக்கல்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான உறவுகள் குறித்து ஒரு நாள் வெளியிட்ட கருத்துக்களுக்கும் மறுநாள் வெளியிட்ட கருத்துக்களுக்கும் உள்ள வேறுபாடு உலக அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்’ என்று ஒரு நாள் அதிரடியாகப் பதிவிட்டவர், அடுத்த நாளே இந்தியாவுடன் தங்கள் உறவுகள் ‘சிறப்பு’ வாய்ந்தவை என்றும், பிரதமர் மோடி தனக்கு ஒரு ‘சிறந்த நண்பர்’ என்றும் குறிப்பிட்டார். இந்த திடீர் மனமாற்றம், உலக அரசியல் பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.டிரம்ப், தனது  ‘ட்ரூத் சோஷியல்’ X பக்கத்தில், “இந்தியா மற்றும் ரஷ்யாவை, சீனாவின் ஆழமான இருண்ட பகுதிகளிடம் நாம் இழந்துவிட்டோம். அவர்களுக்கு ஒரு நீண்ட மற்றும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், அவர் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் பழைய புகைப்படத்தையும் பகிரந்திருந்தார். இந்த கருத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், மோடி, ஜி, புதின் ஆகியோரிடையே காணப்பட்ட நெருக்கமான உறவு வெளிப்பட்ட பிறகு வந்தது.ஆனால், மறுநாள், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். “நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர். அவர் சிறந்தவர். நான் எப்போதும் நண்பனாக இருப்பேன், ஆனால் இந்த நேரத்தில் அவர் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை” என்றார். இந்தியாவுடன் உறவுகளை மீட்டெடுக்கத் தயாரா என்று கேட்டதற்கு, சிரித்தபடியே, “கவலைப்பட ஒன்றுமில்லை. சில சமயங்களில் நமக்கு சில தருணங்கள் உருவாகும்” என்று கூறினார்.எண்ணெய் வாங்குவதே பிரச்சனைக்கான மூலமா?டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்கான முக்கிய காரணம், இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுதான். “இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இவ்வளவு எண்ணெய் வாங்குவது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இதை 50 சதவீத வரியுடன் அவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். நான் மோடியுடன் நன்றாகப் பழகுகிறேன், உங்களுக்குத் தெரியும். அவர் சில மாதங்களுக்கு முன்பு இங்கு இருந்தார். நாங்கள் ரோஸ் கார்டனுக்குச் சென்றோம்…” என்றும் தெரிவித்தார்.இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் பொருளாதார மற்றும் வர்த்தக காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறினார். “அது ரஷ்ய எண்ணெய் ஆக இருந்தாலும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், நமது தேவைகளுக்கு ஏற்ற இடத்தில் இருந்து வாங்குவது நமது முடிவு… அதனால், நமது தேவைகளுக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ, அதைத்தான் நாம் வாங்குவோம்” என்று அவர் கூறினார்.அமெரிக்காவின் இரட்டை வேடம்?உக்ரைன் போருக்கு ரஷ்யாவிற்கு இந்தியா நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் வாங்குவது, அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்விலிருந்து இந்திய குடிமக்களைப் பாதுகாக்கவே என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும், சீனா மற்றும் ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் போது, இந்தியா மீது மட்டும் அபராதம் விதிப்பது நியாயமற்றது என்றும் இந்தியா கூறியுள்ளது.டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, உக்ரைன் மோதலை “மோடியின் போர்” என்று வர்ணித்து, இந்தியாவை “கிரெம்லினுக்கு எண்ணெய் பணத்தை சலவை செய்யும் நாடு” என்று குற்றம் சாட்டியிருந்தார். இது போன்ற கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது நிலைப்பாட்டை மென்மையாக மாற்றியிருப்பது கவனிக்கத்தக்கது.டிரம்பின் இந்த பல்வகைப்பட்ட கருத்துக்கள், அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எவ்வளவு சிக்கலானது என்பதை எடுத்துக்காட்டுகிறது. மோடியுடனான தனிப்பட்ட நட்பை டிரம்ப் தொடர்ந்து பாராட்டிய போதிலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி உறவு குறித்து அமெரிக்காவின் கவலைகள் தெளிவாகத் தெரிகின்றன. இது இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கலாம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன