இந்தியா
தமிழகத்தின் வீராணம் திட்டம் போல், புதுச்சேரி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் – சுயேட்சை எம்.எல்.ஏ கோரிக்கை
தமிழகத்தின் வீராணம் திட்டம் போல், புதுச்சேரி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் – சுயேட்சை எம்.எல்.ஏ கோரிக்கை
தமிழகத்தில் காவிரி ஆற்று நீரை வீராணம் ஏரியில் தேக்கி குழாய்கள் மூலம் தலைநகர் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வது போல் புதுச்சேரி நகரப்பகுதிக்கு மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தெரிவித்து இருப்பதாவது; புதுச்சேரியில் நீர்நிலைகளாக ஆறுகள், ஏரிகள், குளங்கள், மடுவுகள், ஓடைகள், மழை வெள்ள வடிகால் வாய்க்கால்கள் பெருமளவு இருந்த நிலையில் தற்போது மேற்கண்ட நீர்நிலைகளில் பல நீர்நிலைகள் இருந்த சுவடுகளே இல்லாமல் உள்ளது. மிஞ்சி இருக்கும் பல நீர்நிலைகள் பல ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி குறுகி வருகிறது. நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதுடன் கழிவுநீரை கலக்க செய்து நிலத்தடி நீரை பாழாக்கி வருகிறார்கள். அதேநேரத்தில் சிற்றாகவும், ஓடையாகவும், வடிகால் வாய்க்காலாகவும் இருந்த நல்ல நீர்நிலைகள் கழிவுநீர் வாய்க்கால்களாக மாறி வருகிறது. இதை தடுக்க வேண்டிய அரசு துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க உகந்த குடிநீர் கிடைக்காமல் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.பொதுப்பணித்துறையினர் நகரம் மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிகபடியாக மாசடைந்த குடிநீரை விநியோகம் செய்வதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வாந்தி, பேதி மற்றும் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதுடன் சிலர் உயிரிழந்துவிட்டனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் பீதியடைந்து தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். புதுச்சேரி நீரின் தன்மை பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அதில் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கோலிபார்ம் பாக்டீரியா பன்மடங்கு அதிகரித்து வருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியதன் பேரில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட காரணத்தால் புதுச்சேரி மாசு கட்டுபாடு வாரியம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் 100 மி.லி நீரில், 100 mpn அளவு மல கோலிபார்ம் பாக்டீரியா இருக்கலாம் என்ற நிலையில், நகரப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் நீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதில் ஆனால் அந்த 100ml நீரில், 1600 mpn அளவு மல கோலிபார்ம் பாக்டீரியா இருப்பது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கும் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மலம் கலந்த கழிவுநீர் மேற்கண்ட நீர்நிலைகளில் கலந்து அது பிரதான வாய்க்கால்கள் வழியாக உப்பாறு மற்றும் பெரிய வாய்க்கால் போன்ற பிரதான நீர்நிலைகள் மூலம் வெளியேறி நேரடியாக கடலில் கலப்பதால் இதுபோன்ற கோலிபார்ம் பாக்டீரியாக்கள் பெருமளவில் பரவி மக்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல் மற்றும் சுவாசகோளாறு ஏற்படுவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மலம் கலந்த கழிவுநீர் நேரிடையாக கடலில் சென்று கலப்பதால் கடல்வாழ் உயிரினங்களான மீன், இறால், நண்டு போன்றவை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அதை உணவாக உண்ணும் பொதுமக்களுக்கு கோலிபார்ம் பாக்டீரியாக்களின் தாக்கத்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு வாந்தி, பேதி ஏற்படுவதுடன் காய்ச்சல் மற்றும் சுவாசகோளாறுகள் ஏற்பட்டு பெரும்பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று தெரியவருகிறது. முத்திரையர்பாளையம் பகுதிகளில் இருந்து நகரபகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் அதிக மாசு அடைந்துள்ளதாக தெரிகிறது. அதை பொதுப்பணித்துறையினர் கவனத்தில் கொள்ளாமல் அப்படியே விநியோகம் செய்வதால் எனது தொகுதியான நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும் பிற தொகுதிகளான நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளிலும் இந்த குடிநீரை பருகிய பொதுமக்களில் நூற்றுக்கணக்காணோர் அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். எனது தொகுதியில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் நேற்று 07.09.2025 அன்று இறந்திருக்கிறார்கள். மேலும் கடந்த இரண்டு தினங்களில் பிற தொகுதிகளிலும் பலர் இறந்திருக்கிறார்கள். இதை அரசும், சம்பந்தப்பட்ட துறையினரும் உணர்ந்து பொதுமக்களின் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்று புகார் கூறி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற அச்சப்படுகிறார்கள். இதனால் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே இறந்துவிட்டார்கள். இது அரசின் அலட்சியப்போக்கால் நிகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. இதேபோல் நிகழ்வு கடந்த மாதம் நடைபெற்றது. அப்படியிருந்தும் இதை பொருட்படுத்தாத சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களின் உயிருடன் விளையாடி கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாமல் நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தன்மை 3000 TDS அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இதையும் சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுக்கொள்ளாமல் மெத்தனபோக்குடன் இருக்கிறார்கள். இதை போக்க மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து போர்கால அடிப்படையில் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஏ.எஃப்.டி (AFD) திட்டத்தின் மூலம் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை தேக்கி பயன்படுத்தும் விதமாக சுமார் 500 கோடி செலவில் பாகூர் கொம்யூன் மணமேடு பகுதியை ஒட்டிய தென்பெண்ணை ஆற்றில் போர்வெல் அமைத்து நகரப்பகுதியில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி இதற்கு தடையாக இருப்பவர்களை அழைத்து பேசி நிலைமைகளை புரிய வைத்து அண்டை மாநிலமான தமிழகத்தில் காவிரி ஆற்று நீரை வீராணம் ஏரியில் தேக்கி குழாய்கள் மூலம் தலைநகர் சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வது போல் நமது நகரப்பகுதிக்கு மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
